குழித்துறையில் இருந்து கன்னியாகுமரிக்கு கொரோனா குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு பேரணி
குழித்துறையில் இருந்து கன்னியாகுமரி வரை தீயணைப்பு வீரர்கள் மோட்டார் சைக்கிளில் கொரோனா விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
கன்னியாகுமரி,
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பொதுமக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்டங்களில் பேரணி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி குமரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் குழித்துறையில் இருந்து கன்னியாகுமரி வரை தீயணைப்பு வீரர்கள் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.
குழித்துறை பஸ்நிலையம் முன் இருந்து தொடங்கிய இந்த பேரணிக்கு குமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு தலைமை தாங்கினார். பேரணியை பத்மநாபபுரம் சப் -கலெக்டர் சரண்யாஅரி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியானது தக்கலை, வில்லுக்குறி, பார்வதிபுரம், நாகர்கோவில், மீனாட்சிபுரம், கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், பொற்றையடி, கொட்டாரம், விவேகானந்தபுரம் வழியாக கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நிறைவடைந்தது. பேரணியை மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி கார்த்திகேயன் முடித்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கட சுப்பிரமணியன், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணியில் 40 மோட்டார் சைக்கிள்களில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களில் உள்ள 80 வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் வழி நெடுகிலும் பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.
Related Tags :
Next Story