“அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்


“அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை” ஆசிரியை தற்கொலையில் பரபரப்பு கடிதம் சிக்கியது - உருக்கமான தகவல்கள்
x
தினத்தந்தி 22 Oct 2020 7:00 AM GMT (Updated: 22 Oct 2020 6:33 AM GMT)

அவதூறு பரப்பும் உலகில் வாழ விரும்பவில்லை என எழுதி விட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அவரை பற்றி அவதூறு பரப்பியவர் யார்? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே மலையடி கோவில்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்சன் மகள் ஜாஸ்மின் (வயது 34). இவருக்கும், ஞாறான்விளை பகுதியைச் சேர்ந்த ஆசீர் ஜெபசிங் (48) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். தனியார் பள்ளியில் ஜாஸ்மின் ஆசிரியையாக வேலை பார்த்து வந்ததோடு பெற்றோருடன் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் ஜாஸ்மின் நேற்று முன்தினம் காலையில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ஜாஸ்மின் அறையை சோதனையிட்டதில், அவர் சாவதற்கு முன்பு எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது. இதனால் அவருடைய தற்கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அந்த கடிதத்தில், என்னுடைய சாவுக்கு யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. எனது கணவர் 3 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரை ஊருக்கு வரும்படி பலமுறை அழைத்தேன். ஆனால் அவர் வரவில்லை. என்னை பற்றி அவதூறு பரப்பும் உலகில் நான் வாழ விரும்பவில்லை. என்னுடைய மரணத்திற்கு பிறகு எனது கணவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க வேண்டும். இந்த வீட்டை கணவருக்கு கொடுத்து விடுங்கள். எனது மகள் மற்றும் பெற்றோரை அவர் பார்த்துக் கொள்வார் என எழுதப்பட்டிருந்தது.

ஜாஸ்மினை பற்றி அவதூறு பரப்பியவர் யார்? என்று அந்த கடிதத்தில் கூறப்படவில்லை. இதனால் அவரை தற்கொலைக்கு தூண்டியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாஸ்மினின் செல்போன் பதிவுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story