திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் - சம்பளம் வழங்கக்கோரி நடந்தது


திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் - சம்பளம் வழங்கக்கோரி நடந்தது
x
தினத்தந்தி 22 Oct 2020 4:16 PM IST (Updated: 22 Oct 2020 4:16 PM IST)
t-max-icont-min-icon

சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி துப்புரவு தொழிலாளர்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.510 வழங்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இவர்களுக்கு சராசரியாக ரூ.300 தினக்கூலி வழங்குவதாக தெரிகிறது.

இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் நேற்று காலை வரை வழங்கவில்லை என தெரிகிறது. வழக்கமாக 10-ந் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று வரை ஊதியம் வழங்கவில்லை. இதை கண்டித்து மூன்றாவது மண்டலத்தில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை 7 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி தலைமை அலுவலகம் வந்தனர். தங்களுக்கு சம்பளம் உடனடியாக வழங்கக்கோரி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

துப்புரவு தொழிலாளர்கள் கூறும்போது, ‘தினக்கூலியாக ரூ.510 வழங்க வேண்டும். மாதம்தோறும் 10-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். தீபாவளிக்கு நியாயமான போனஸ் வழங்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

இது குறித்து அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். துப்புரவு பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் வந்து பேசினார்கள். அதன்பிறகு சம்பளம் உடனடியாக அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு காலை 10 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story