காய்ச்சல், சளி அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும் - தனியார் மருத்துவமனைகளுக்கு கலெக்டர் உத்தரவு


காய்ச்சல், சளி அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும் - தனியார் மருத்துவமனைகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 22 Oct 2020 12:01 PM GMT (Updated: 22 Oct 2020 12:01 PM GMT)

காய்ச்சல், சளி அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருபவர்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் 20.10.2020 வரை கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 264 பேர் இறந்துள்ளனர். இதில் 186 பேர் கடலூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று இறந்துள்ளனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு வர வேண்டும். நோய் தொற்று அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் பரிசோதனை செய்துகொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே நோய் தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை வழங்கப்பட்டு பூரண குணமடையலாம்.

சர்க்கரை வியாதி, இருதய நோய் போன்ற நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து உட்கொண்டு வருபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அல்லது சுகாதார பணியாளர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளை நோய் தொற்று தீவிரமான நேரத்தில் உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இந்திய மருத்துவக்கழக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தகுந்த நேரத்தில், தாமதமின்றி உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பலாம். தனியார் மருத்துவமனைகளில் எடுக்கப்படும் கொரோனா தொற்று பரிசோதனைகள், சி.டி.ஸ்கேன் போன்ற விவரங்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை தனியார் மருத்துவமனைகள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாவட்டத்தில் கொரோனா இறப்புகளை தவிர்க்கும் பொருட்டு அவசர தேவைகளுக்காக 44 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் கொரோனாவால் ஏற்படும் இறப்பை தடுப்பதற்கு பொதுமக்கள் தங்கள் உடலில் அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து, மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். மருத்துவக்குழுவினரும் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, அதிக பரிசோதனைகள் மேற்கொண்டு கொரோனா தொற்று இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார், தேசிய சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரிமேலழகர், அரசு தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் சாய்லீலா, ராஜா முத்தையா மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story