திருப்பத்தூர் மாவட்டத்தில் வங்கிகள் கடன் உதவியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் - கலெக்டர் சிவன்அருள் பேச்சு


திருப்பத்தூர் மாவட்டத்தில் வங்கிகள் கடன் உதவியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் - கலெக்டர் சிவன்அருள் பேச்சு
x
தினத்தந்தி 22 Oct 2020 1:29 PM GMT (Updated: 2020-10-22T18:59:45+05:30)

திருப்பத்தூர் மாவட்டத்தில் வங்கிகள் கடன் உதவியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என கலெக்டர் சிவன் அருள் பேசினார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு புதிய தொழில் முனைவோருக்கு அரசு மானியத்துடன் வழங்கி வரும் வங்கிகடன் உதவிகள் மற்றும் புதிய கடன் உதவிகள் குறித்த மாதாந்திர வங்கிகளுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் படித்த இளைஞர்கள் பொருளாதார மேம்பாடு அடைய தொழில் தொடங்கவும், பெண்கள் குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அரசின் பல்வேறு துறைகள் சார்பாக மானியத்துடன் வழங்கப்படும் கடன் உதவிகளை சிரமமின்றி பெற்றிடவும் வங்கிகள் கடன் உதவிகளை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

கடன் உதவியை பெற்றிட பொதுமக்கள் வங்கிகளை நாடும்போது அவர்களை அலைக்கழிக்கக்கூடாது. அதேபோல் கல்விக் கடன் உடனுக்குடன் வழங்க வேண்டும். வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு விரைவாக கடன் உதவிகள் வழங்க வேண்டும் இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் குழுக்களுக்கு 2019-2020ம் ஆண்டில் ரூ.213 கோடி அதிக கடன் உதவியை உடனுக்குடன் வழங்கிய இந்தியன் வங்கிக்கு சிறந்த வங்கிக்கான நினைவு பரிசும், அதிக கடன் உதவி வழங்கிய இந்தியன் வங்கி கிளைக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், கேடயம், தமிழ்நாடு கிராம வங்கிக்கு 2-வது பரிசு ரூ.10 ஆயிரம், கேடயம், கந்திலி கூட்டுறவு வங்கிக்கு 3-வது பரிசு ரூ.5 ஆயிரம், கேடயம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

மேலும் மகளிர் திட்டத்தில் கடன் உதவிகளை பெற்று தந்த உதவி திட்ட அலுவலர்கள் பழனி, கலைச்செல்வன் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கூட்டத்தில் வங்கி மண்டல மேலாளர் கிருஷ்ணராஜ், மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, நபார்டு வங்கி மண்டல துணை மேலாளர் நசிரின், முன்னோடி வங்கி மேலாளர் ஜெகநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story