கிசான் கடன் அட்டை மூலம் 150 மீனவர்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி கலெக்டர் வழங்கினார்


கிசான் கடன் அட்டை மூலம் 150 மீனவர்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 23 Oct 2020 12:40 AM IST (Updated: 23 Oct 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கிசான் கடன் அட்டை மூலம் 150 மீனவர்களுக்கு ரூ.1 கோடியே 14 லட்சம் கடன் உதவியை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்களுக்கான கிசான் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, கடன் அட்டைகளை மீன்பிடி படகு உரிமையாளர்கள் மற்றும் மீன் வியாபாரிகளுக்கு வழங்கி பேசினார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

பிரதமரால், விவசாயிகளுக்கு முதன் முதலாக கிசான் கடன் அட்டைகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது மீனவர்கள், தோட்டக்கலை விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கும் இந்த கடன் அட்டை வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள், உள்நாட்டு மீன் பிடிப்பில் ஈடுபடுபவர்கள், மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு மத்திய அரசு அறிவிப்பின்படி மீனவர் கடன் அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 92 மீனவ பயனாளிகள் ரூ.54 லட்சத்து 63 ஆயிரம் பெற்று பயன் அடைந்து உள்ளனர்.

ரூ.1 கோடி கடனுதவி

இந்த திட்டத்தின் கீழ் அமலிநகர், ஆலந்தலை மற்றும் ஜீவாநகர் மீனவர் கிராமங்களை சேர்ந்த 100 மீன்பிடி படகு உரிமையாளர்கள், மீனவ மகளிர் உட்பட 50 மீன் வியாபாரிகள் ஆக மொத்தம் 150 பேருக்கு ரூ.1 கோடியே 14 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மீன்பிடி படகு உரிமையாளர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் வாழ்க்கைத்தரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா, முன்னோடி வங்கி மேலாளர் யோகானந்த், இந்தியன் வங்கி உதவி பொதுமேலாளர் செந்தில்வேல், தூத்துக்குடி மெயின் கிளை மேலாளர் வினோத், மேலூர் கிளை மேலாளர் செல்வமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story