நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்-ஆர்ப்பாட்டம்


நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2020 8:08 PM GMT (Updated: 22 Oct 2020 8:08 PM GMT)

மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நம்பியூர், 

நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பனங்காட்டு படை கட்சி கொங்கு மண்டல பொறுப்பாளர் சதா நாடார், மாநில துணைப் பொதுச்செயலாளர் இமானுவேல், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் செல்வமணி மற்றும் ஏராளமானோர் நேற்று மதியம் 12.30 மணி அளவில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டமும் செய்தனர். இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மயான ஆக்கிரமிப்பு

நம்பியூர் அருகே ந.வெள்ளாளபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நீரோடையை நாங்கள் 30 ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் ஆண்டி தோட்டம் பகுதியை சேர்ந்த சிலரும் அங்கு பிணங்களை புதைத்து வருகிறார்கள். எனவே அந்த பிணங்களை அகற்றி வேறு இடங்களில் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதற்கு போலீசார் கூறும்போது, ‘இதுகுறித்து தாசில்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து கொள்ளலாம்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் தாசில்தார் வெங்கடேஸ்வரனை பொதுமக்கள் சந்தித்து தங்கள் கோரிக்கைளை மனுவாக எழுதி கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் கூறும்போது, ‘தற்போது நீரோடை பகுதி புறம்போக்காக உள்ளது. இதைத்தொடர்ந்து அதனை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் முன்புள்ள ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story