மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா
x
தினத்தந்தி 22 Oct 2020 9:40 PM GMT (Updated: 22 Oct 2020 9:40 PM GMT)

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

ஈரோடு, 

டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம் புள்ளப்பநாயக்கன் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு ரூ.17 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு விழா மற்றும் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது, பாலமரக்காடு பகுதியில் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைப்பது ஆகியவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி என மொத்தம் ரூ.84 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி, ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். மேலும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியையும், மேல்நிலை தொட்டி அமைக்கும் பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 13 பேருக்கு முதியோர் ஓய்வூதிய தொகை பெறுவதற்கான ஆணையை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, கோபி ஆர்.டிஓ. ஜெயராமன், கோபி தாசில்தார் தியாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மாதம்பாளையம் ஊராட்சி பெரியபுதூரில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடம், வெங்கநாயக்கன்பாளையத்தில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் ஆகியன திறப்பு விழாவும் மற்றும் பெரியபுதூரில் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், சின்னபுதூரில் ரூ.5 லட்சம் மதிப்பிலும் மேல்நிலைத் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது.

நிகழ்ச்சிகளுக்கு பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, கட்டிடங்களை திறந்து வைத்து, மேல்நிலை தொட்டி அமைக்க பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் மாதம்பாளையம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜன் தனது சொந்த நிதியில் இருந்து பெரியபுதூர் பால் உற்பத்தியாளர்கள் 45 பேருக்கு ரூ.27 ஆயிரம் மதிப்பில் பால்கேன் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட கவுன்சிலர் தங்கராஜ், பவானிசாகர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி, பவானிசாகர் பேரூர் செயலாளர் வாத்தியார் துரைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் தனலட்சுமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் ஓதிவேல், ராமசாமி, தர்மசாமி, பாலன், மிலிட்டரி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்தியூர்

அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.61 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அந்தியூர் தொகுதி இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் மருந்தக கட்டிடமும் திறந்து வைக்கப்பட்டது.

அதன்பின்னர் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளை எம்.எல்.ஏ. பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அந்தியூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் எஸ்.பி.ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் எஸ்.பி.பழனிசாமி, பால்சாமி, மோகன், குருராஜ், கிருஷ்ணன், செல்வராஜ், ஏ.பி.எஸ். சரவணன், சண்முகானந்தம் மற்றும் டாக்டர்கள் கவிதா, சக்தி, சங்கீதா, செல்வம் உள்பட செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story