பெங்களூரு தனியார் மருத்துவமனையில் நடிகை மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது
பெங்களூரு தனியார் மருத்துவமனையில், நடிகை மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிரஞ்சீவி சர்ஜா மறுபிறவி எடுத்திருப்பதாக குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெங்களூரு,
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் மேக்னா ராஜ். இவர் காதல் சொல்ல வந்தேன் உள்பட சில தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். இவரும் கன்னட திரையுலகின் இளம் நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சிரஞ்சீவி சர்ஜா திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் மேக்னா ராஜை பாதித்தது. சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்த போது மேக்னா ராஜ் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேக்னா ராஜுக்கு, சிரஞ்சீவி சர்ஜாவின் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி இருந்தனர். மேலும் குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்தும் காத்து இருந்தனர்.
ஆண் குழந்தை பிறந்தது
இந்த நிலையில் நேற்று காலை மேக்னா ராஜுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை குடும்பத்தினர் பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள அக்ஷா தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதுபற்றி சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பி துருவ் சர்ஜா நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து குட்டி சிரு பிறந்து விட்டதாக கூறி அவரது ரசிகர்கள் சாலையில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் ஆண் குழந்தை பிறந்ததால் சிரஞ்சீவி சர்ஜா மறுபிறவி எடுத்து இருப்பதாக மேக்னா ராஜும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் குழந்தையை சிரஞ்சீவி சர்ஜாவின் புகைப்படம் முன்பு வைத்து குடும்பத்தினர் ஆசியும் பெற்றனர்.
மேக்னா ராஜுக்கு பிறக்க போகும் குழந்தைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளி தொட்டிலை, துருவ் சர்ஜா வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story