பண்ணை பசுமை கடைகளில் 2-வது நாளாக விற்பனை: பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வெங்காயம் வாங்கினர்


பண்ணை பசுமை கடைகளில் 2-வது நாளாக விற்பனை: பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வெங்காயம் வாங்கினர்
x
தினத்தந்தி 22 Oct 2020 11:04 PM GMT (Updated: 22 Oct 2020 11:04 PM GMT)

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் நேற்று 2-வது நாளாக 45 ரூபாய்க்கு வெங்காய விற்பனை நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

சென்னை, 

தமிழகத்துக்கு வெங்காயம் சப்ளை செய்யும் மாநிலங்களான மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வரத்து குறைந்து, தமிழகத்தில் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வெங்காயமானது கடைகளில் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.45-க்கு வெங்காயத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் நேற்று முன்தினம் முதல் வெங்காய விற்பனை தொடங்கியது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் நேற்று முதல் 45 ரூபாய்க்கு வெங்காய விற்பனை தொடங்கியது.

சென்னையில் 2-வது நாளாக நேற்று பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி வளாகத்தில் அமைந்துள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் வெங்காயம் வாங்குவதற்காக நேற்று காலை 6 மணி முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வந்த மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.

காலை 8.30 மணிக்கு கடை திறக்கப்பட்டு வெங்காய விற்பனை நடைபெற்றது. ஒரே நபர் அதிக அளவில் வெங்காயத்தை வாங்கிச் செல்வதை தவிர்ப்பதற்காக ஒரு நபருக்கு 2 கிலோ வெங்காயம் மட்டும் வழங்கப்பட்டது. வெங்காய விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே வெங்காயம் விற்று தீர்ந்து விட்டது. நேற்று மட்டும் சென்னையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 3 டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story