காருக்கு மாத தவணை கட்ட முடியாமல் 3½ ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்த டிரைவர்


காருக்கு மாத தவணை கட்ட முடியாமல் 3½ ஆண்டுகளாக கொள்ளையடித்து வந்த டிரைவர்
x
தினத்தந்தி 22 Oct 2020 11:07 PM GMT (Updated: 22 Oct 2020 11:07 PM GMT)

காருக்கு மாத தவணை கட்ட முடியாமல் திருட தொடங்கி, சுமார் 3½ ஆண்டுகளாக தொடர்ந்து கொள்ளையடித்து வந்த கார் டிரைவர் கைதானார். கொள்ளையடித்த பணத்தில் புதிய கார், மனைவிக்கு நகைகள் வாங்கி கொடுத்தது தெரிந்தது.

பூந்தமல்லி, 

குன்றத்தூரை அடுத்த கோவூர், தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது. அதேபோல் குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தது. அனைத்து இடங்களிலும் ஒரே பாணியில் கைவரிசை காட்டியதால் ஒருவரே இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர்.

குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி சகாய பரத், தமிழ்ச்செல்வி, காண்டீபன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்த காட்சிகளை வைத்து சம்பவம் தொடர்பாக பல்லாவரம் அடுத்த பம்மல், கவுல்பஜாரை சேர்ந்த பாலாஜி (வயது 25) என்ற கார் டிரைவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3½ ஆண்டுகளாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

டிரைவரான பாலாஜி, சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வந்தார். காருக்கான மாத தவணையை முறையாக செலுத்த முடியாததால் திருட்டு தொழிலில் ஈடுபட தொடங்கினார். அதன்பிறகு பணத்தேவை ஏற்படும் போதெல்லாம் திருடி வந்துள்ளார்.

இதற்காக தனியாக இருக்கும் மற்றும் பூட்டி இருக்கும் வீடுகளை பகல் நேரத்தில் நோட்டமிடுவார். பின்னர் இரவில் மோட்டார் சைக்கிளில் லுங்கி மற்றும் பனியன் மட்டும் அணிந்து கொண்டு குறிப்பிட்ட அந்த வீட்டுக்கு சென்று கொள்ளையடிப்பார். கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருக்க மோட்டார் சைக்கிளின் முன் மற்றும் பின் பகுதிகளில் மின் விளக்கை அணைத்துவிடுவார்.

இவ்வாறு 3½ ஆண்டுகளாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தார். கொள்ளையடித்த பணத்தில் காருக்கான மாத தவணையை கட்டி முடித்ததுடன், புதிதாக மேலும் ஒரு கார் வாங்கி உள்ளார். அத்துடன் தனது மனைவிக்கு விதவிதமான நகைகளையும் வாங்கி கொடுத்து உள்ளார்.

இந்த வழக்கில் மோட்டார் சைக்கிளின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் வாகனத்தின் பதிவு எண்ணை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தது. ஆனால் மோட்டார் சைக்கிளின் இருக்கையில் போட்டு இருந்த புலி தோல் போன்ற உறையை வைத்து துப்புதுலக்கி பாலாஜியை கைது செய்தோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கைதான பாலாஜியிடம் இருந்து 65 பவுன் நகைகளும், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story