சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் பரிதாப சாவு


சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து: டிராக்டர் சக்கரத்தில் சிக்கி என்ஜினீயர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 22 Oct 2020 11:55 PM GMT (Updated: 22 Oct 2020 11:55 PM GMT)

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக் கிள்-சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில், என்ஜினீயர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த உறவினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சங்கரன்கோவில், 

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் மகன் ஜெகதீஷ் (வயது 27). என்ஜினீயர். அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகையா மகன் பாலசுப்பிரமணியன் (23). உறவினர்களான இவர்கள் 2 பேரும் நேற்று காலையில் சங்கரன்கோவில் வாடிக்கோட்டை விலக்கு அருகே தனியார் பள்ளியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். பாலசுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி டவுன் போலீஸ் நிலையம் எதிரில் சென்றபோது, அந்த வழியாக சைக்கிளில் சென்ற முதியவர் திடீரென்று சாலையின் வலதுபுறமாக கடக்க முயன்றார். அப்போது சைக்கிளின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த பாலசுப்பிரமணியன், ஜெகதீஷ் ஆகிய 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

உடல் நசுங்கி சாவு

அப்போது அந்த வழியாக எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக ஜெகதீசின் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்த ஜெகதீஷ் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக டிராக்டர் டிரைவரான புளியம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஆனந்த பிரகாஷ் (19), சைக்கிளை ஓட்டி வந்த சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த முத்துபாண்டி (69) ஆகிய 2 பேர் மீது சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தபிரகாசை கைது செய்தனர்.

Next Story