விளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றுவதில் தகராறு: அ.தி.மு.க.-தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 602 பேர் மீது வழக்குப்பதிவு


விளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றுவதில் தகராறு: அ.தி.மு.க.-தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 602 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 23 Oct 2020 12:07 AM GMT (Updated: 2020-10-23T05:37:43+05:30)

விளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அ.தி.மு.க.-தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 602 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விளாத்திகுளம், 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தி.மு.க. சார்பில் கட்சி கொடிக்கம்பத்தை புதுப்பித்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு போலீசாரிடம் அனுமதி பெற்று இருந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தலைமையில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கொடியேற்றினார்.

அந்த சமயத்தில் அ.தி.மு.க.வினரும் கொடியேற்ற போவதாக கூறி பஸ் நிலைய பகுதிக்கு வந்தனர். அவர்கள் தி.மு.க.வினர் கொடி தோரணங்கள் கட்டியிருந்த பகுதியில் தங்களது கட்சி கொடிகளையும் கட்டுவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முறையாக அனுமதி பெறவில்லை என கூறி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அ.தி.மு.க.வினர் பஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

போலீஸ் தடியடி

அப்போது அங்கு வந்த சின்னப்பன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டிடம் பேசி அனுமதி பெற்று இருப்பதாகவும், தங்களை கொடியேற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார். இதை ஏற்க மறுத்த போலீசாருக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அ.தி.மு.க.வினர் மீது லேசான தடியடி நடத்தினார்கள். இதை கண்டித்து அ.தி.மு.க.வினர் பஸ் நிலையம் முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு, மறியலில் ஈடுபட்ட சின்னப்பன் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் அ.தி.மு.க.வினர் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், கீதாஜீவன், முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் உள்பட 602 பேர் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

அதாவது, விளாத்திகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வினர் 102 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில், கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் அதிகமான நபர்களை அழைத்து வருதல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முககவசம் அணியாமல் வருதல், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருத்தல் ஆகியவற்றின் கீழ் தி.மு.க.வினர் 500 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story