ஆண்டிப்பட்டியில் துணிகரம்: தனியார் கல்லூரி பெண் ஊழியரை கட்டையால் தாக்கி நகை பறிக்க முயற்சி - போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை


ஆண்டிப்பட்டியில் துணிகரம்: தனியார் கல்லூரி பெண் ஊழியரை கட்டையால் தாக்கி நகை பறிக்க முயற்சி - போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
x
தினத்தந்தி 23 Oct 2020 1:23 AM GMT (Updated: 23 Oct 2020 1:23 AM GMT)

ஆண்டிப்பட்டியில் தெருவில் நடந்து சென்ற தனியார் கல்லூரி பெண் ஊழியரின் தலையில் கட்டையால் தாக்கி நகை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு போலீஸ் சூப்பிரண்டு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் வசிக்கும் சிவக்குமார் மனைவி வசந்தமாலா (வயது45). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக ஊழியராக உள்ளார். நேற்று இவர் கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனை முன்பு உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி பாப்பமாள்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.

பாப்பம்மாள்புரம் பகவதியம்மன் கோவில் அருகே சென்ற போது பின்னால் ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள், திடீரென வசந்தமாலாவின் தலையில் கட்டையால் தாக்கினர். இதனால் நிலைகுலைந்து போன வசந்தமாலா அலறியபடி கீழே விழுந்தார்.

இதையடுத்து மர்மநபர்கள் வசந்தமாலா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது வசந்தமாலா தங்கச்சங்கிலியை இறுக்க பற்றிக்கொண்டு கூச்சல் போட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். இதை பார்த்ததும் மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

இதனிடையே மர்மநபர்கள் தாக்கியதில் வசந்தமாலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும் பாப்பம்மாள்புரம் பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை பறிக்க முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தெருவில் நடந்து சென்ற பெண்ணின் தலையில் கட்டையால் தாக்கி நகையை பறிக்க முயன்ற சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story