நானே அடிக்கல் நாட்ட வருவேன்: விவசாயிகளின் கனவான காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் - எடப்பாடி பழனிசாமி உறுதி
விவசாயிகளின் கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டுவேன் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஜல்லிக்கட்டு காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது;-
புதுக்கோட்டை மண் வீரம் செறிந்த மண். ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையை சேர்ந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஜல்லிக்கட்டு வீர விளையாட்டில் ஈடுபடும் வீரர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் இருக்கிறார்கள். தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். கடந்த ஆண்டு 110 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஒரு விவசாய பூமி ஆகும். வானம் பார்த்த பூமியாக உள்ள இந்த மண்ணை வளமையாக மாற்றுவதற்கு காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவாகும். அந்த கனவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் இப்போது தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் கால்வாய்கள் அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணிகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவாக திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் புதுக்கோட்டை மாவட்டம் வளமிக்க பூமியாக, பசுமையான பூமியாக மாறும். வேளாண் பெருமக்கள் கண்ட கனவை அரசு நிறைவேற்றித் தரும்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு நானே நேரில் இங்கு வருவேன் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற சிலை மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை வடிவமைத்த சிற்பிக்கு எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதில் ஆவின் சேர்மன் பழனியாண்டி, விராலிமலை ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி (கிழக்கு), மாவட்ட கவுன்சிலர் (மேற்கு) ஆர்.கே.எஸ். சிவசாமி, அரசு முதல் நிலை ஒப்பந்தகாரர் விளாம்பட்டி மாரிமுத்து மற்றும் விராலிமலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story