2 நாட்களாக மழை இல்லாததால் குறுவை அறுவடை தீவிரம்: நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் நெல்லை காய வைக்கும் பணி - சரக்கு ஆட்டோ, டிராக்டர்களில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்
2 நாட்களாக மழை இல்லாததால் குறுவை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை சரக்கு ஆட்டோ, டிராக்டர்களில் கொண்டு வந்து நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் வரை கொட்டி காய வைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதால் தண்ணீர் எளிதில் பாசன பகுதிகளை சென்றடைந்தது. இதனால் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 35 சதவீதம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.
குறுவை அறுவடை பணிகளும் கடந்த 1 மாதமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீதம் அறுவடை முடிவடைந்து விட்டது. வழக்கமாக எக்டேருக்கு 6 டன் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு அதிக பட்சமாக 6.2 டன் வரை மகசூல் கிடைத்து வருகிறது. முன்பு ஆட்கள் வைத்து நெல் அறுவடை செய்யப்படும். ஆனால் தற்போது எந்திரம் மூலம் அறுவடை நடைபெறுவதால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைகள் நடைபெறுகின்றன.
அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கிறார்கள். இதற்காக கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் நெல்லை குவியல், குவியலாக கொட்டி வைத்து விற்பனை செய்கிறார்கள். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்ததால் நெல் மழையில் நனைந்து பல்வேறு இடங்களில் முளைத்து காணப்பட்டது.
நெல் மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய் போட்டு மூடப்பட்டு இருந்தாலும் நனைந்தது. இருப்பினும் நெல் கொள்முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. வெயில் காணப்படுகிறது. அறுவடை செய்யாமல் மீதமுள்ள பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல்லை விவசாயிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டி காய வைத்து வருகிறார்கள். தஞ்சை புறவழிச்சாலையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் உள்ள ரவுண்டானா வரை நீண்ட தூரத்துக்கு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து காய வைத்து வருகிறார்கள்.
மேலும் தற்போது அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் டிராக்டர்கள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் மூலமும் கொண்டு வந்து கொட்டி காய வைத்து வருகிறார்கள். ஒருபுறம் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக வழி விட்டு நெல்லை காய வைத்து வருகிறார்கள். இதே போல் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் நெல்லை கொட்டி காய வைத்து வருகிறார்கள். ஒரிரு நாட்களில் நெல் காய்ந்து விடும். பின்னர் அவற்றை மீண்டும் டிராக்டர், சரக்கு ஆட்டோக்களில் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்வோம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story