மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் புதிதாக 30 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Oct 2020 6:15 AM GMT (Updated: 23 Oct 2020 6:13 AM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 68 ஆயிரத்து 937 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்த நிலையில் 16 ஆயிரத்து 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 4 ஆயிரத்து 671 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

14 ஆயிரத்து 826 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 2 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 74 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் ஆமத்தூரை சேர்ந்த 69 வயது முதியவர், சங்கரலிங்காபுரத்தை சேர்ந்த 48 வயது நபர், சிவகாசி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த 36 மற்றும் 35 வயது நபர்கள், பாலையம்பட்டியை சேர்ந்த 3 பேர், மேல குருணை குளம், அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம் உள்பட மாவட்டம் முழுவதும் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,165 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 1,486 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், 4,671 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2 நாட்களாக செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளும் தெரிவிக்கப்படாத நிலை உள்ளது.

நேற்றும் மாவட்ட சுகாதார துறை பாதிப்பு அடைந்தவர்களின் முழுமையான பட்டியலை வெளியிடவில்லை. அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை, மாநில சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய நிலையில், முழுமையான பட்டியலை வெளியிடாமல் மாநில பட்டியலுடன் முரண்பாடு ஏற்படும் வகையில் பட்டியல் வெளியிடப்படும் நிலை தொடர்கிறது.

மாவட்ட சுகாதாரதுறை பரிசோதனை மேற்கொள்வதிலும், முடிவுகளை தெரிவிப்பதிலும் போதிய கவனம் செலுத்தாத நிலை நீடிக்கிறது. இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story