திருப்பத்தூரில், மருதுபாண்டியர் நினைவு தினம் நாளை அனுசரிப்பு


திருப்பத்தூரில், மருதுபாண்டியர் நினைவு தினம் நாளை அனுசரிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2020 5:45 AM GMT (Updated: 23 Oct 2020 6:26 AM GMT)

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.

திருப்பத்தூர்,

ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப்போரிட்டு, வீரமரணமடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவுதினம் நாளை (அக்டோபர் 24-ந்தேதி)அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாளை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்கள் மணிமண்டபத்தில் நடைபெறும் 219-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பல்வேறு அமைப்புகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டு மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

இதையொட்டி திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் மருதுபாண்டியர்கள் மணிமண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ஆகியோர் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி, பணிகளை முடுக்கிவிட்டனர்.

தற்போது மருதுபாண்டியர்கள் மணிமண்டபத்தில் வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்தும் பணி, வண்ண விளக்குகள் அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. காவல்துறை சார்பில் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி, முக்கிய பிரமுகர்கள் காரில் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதேபோல் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் அக்டோபர் 27-ந்தேதி குருபூஜை விழா நடைபெறும். அன்றைய தினமும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் காளையார்கோவிலுக்கு வந்து அங்குள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதையடுத்து அங்குள்ள நினைவிடத்திலும் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Next Story