தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள் - மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஆபத்து


தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அழிந்து வரும் அரிய வகை பவளப்பாறைகள் - மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஆபத்து
x
தினத்தந்தி 23 Oct 2020 12:01 PM IST (Updated: 23 Oct 2020 12:01 PM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பால் அரிய வகை பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் முதல் தூத்துக்குடி வரையிலான தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதியில் ஏராளமான அரிய வகை பவளப்பாறை உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

இதேபோல் ராமேசுவரம் முதல் மண்டபம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் வரையிலான பாக்ஜலசந்தி கடல் பகுதியிலும் ஏராளமான பவளப் பாறைகள் உள்ளன. மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்வதற்கு பவளப்பாறைகள் மிக முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பவளப்பாறைகள் அதிகம் உள்ள இடங்களில் மீன்களும் அதிகம் காணப்படும்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடல் பகுதியில் கடல் அலையின் வேகம் மற்றும் நீரோட்ட வேகத்தாலும் கடலில் உள்ள ஏராளமான பவளப்பாறைகள் உடைந்தும் மற்றும் தடை செய்யப்பட்ட மீனவர்களின் மீன்பிடிப்பாலும் பவளப் பாறைகள், கற்கள் உடைந்து சேதம் ஆன நிலையில் அரியமான் கடற்கரை பகுதி முழுவதும் சொல்ல முடியாத அளவிற்கு பவளப் பாறைகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இதேபோல் மாவட்டத்தின் ஏராளமான கடற்கரைப் பகுதியிலும் ஏராளமான பவளப்பாறைகள் சேதமான நிலையில் உடைந்து கரை ஒதுங்கி உள்ளன.

இதுபோன்று பவளப்பாறைகள் தொடர்ந்து உடைந்து அழிந்து வரும் பட்சத்தில் வரும் காலங்களில் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கம் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மீன் வரத்து என்பது மிகமிக குறைவாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எனவே மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பவளப்பாறைகள் சேதம் விளைவிக்கும் வகையில் மீன் பிடிக்கும் மீன்பிடி படகுகளை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும், பவளப்பாறைகளின் முக்கியத்துவம் அதன் சிறப்பு குறித்தும் மீனவர்களிடம் பல முறைகளில் விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்துவதோடு சேதமான பவளப்பாறைகள் உள்ள பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகளை மிதக்க விடுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story