‘வெளியூர் சென்ற பின்பு திரும்பி வரவில்லை’ காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையத்திற்கு குழந்தையுடன் வந்த பெண்


‘வெளியூர் சென்ற பின்பு திரும்பி வரவில்லை’ காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையத்திற்கு குழந்தையுடன் வந்த பெண்
x
தினத்தந்தி 23 Oct 2020 12:30 PM IST (Updated: 23 Oct 2020 12:09 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றத்தில் காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி 4 மாத குழந்தையுடன் ஒரு பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். வெளியூர் சென்ற பின்பு தனது கணவர் திரும்பி வரவில்லை என கூறினார்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் கீழத்தெருவில் வசித்து வருபவர் மகாலட்சுமி(வயது 23). பி.காம். படித்துள்ளார். இவரது வீட்டில் அருகில் வசித்து வருபவர் நாகராஜன்(வயது 26). கொத்தனார். நாகராஜன், மகாலட்சுமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தனர். இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் விருதுநகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். அதில் மகாலட்சுமி 6 மாத கர்ப்பிணியானார். இந்தநிலையில் மகாலட்சுமிக்கு அவரது பெற்றோர்களுடன் கருத்து வேறுபாடு மறைந்தது. இதைதொடர்ந்து நாகராஜன், மனைவி மகாலட்சுமியை அவரது தாயார் வீட்டில் விட்டார். பின்னர் அவர் வெளியூருக்கு சென்று தங்கியிருந்து வேலை செய்ய போவதாக கூறி சென்றார். அதன் பின் அவர் மகாலட்சுமியிடம் போனில் கூட பேச வில்லை. மகாலட்சுமி போனில் பேச பலமுறை முயற்சித்தபோதிலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்தது.

இந்த நிலையில் மகாலட்சுமிக்கு குழந்தை பிறந்து 4 மாதமாகி விட்டது. இதற்கிடையில் மகாலட்சுமி தனது கைக்குழந்தையுடன் நாகராஜனின் பெற்றோர்களிடம் சென்று தன் கணவனை பார்க்க வேண்டும் என்று கூறினார். அதற்கு அவர்கள் நாகராஜன் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டதாக தெரிகிறது. அதனால் அவர் மனமுடைந்தார். இந்தநிலையில் மகாலட்சுமி தனது 4 மாத குழந்தையுடன் திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி தஞ்சம் புகுந்தார். மேலும் அவர் நாகராஜனுக்கு அவரது பெற்றோர் 2-வது திருமணம் செய்ய வைக்க ஏற்பாடுகள் செய்து வருவதாக புகார் செய்தார்.

இதுதொடர்பாக நாகராஜனின் பெற்றோரை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நாகராஜனை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாது என்று கூறி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து நாகராஜன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாலட்சுமி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வருவதால் இன்ஸ்பெக்டர் மதனகலா தேவையான உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story