மதுரையில் பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளர் வீட்டில் துணிகர கொள்ளை - தங்கம், வெள்ளி நகைகள்-பணத்தை எடுத்துச்சென்ற கும்பலுக்கு வலைவீச்சு
மதுரையில் பட்டப்பகலில் நகை மதிப்பீட்டாளர் வீட்டில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு, தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்துடன் தப்பிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மதுரை,
மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர், தீனதயாளன்(வயது 65). இவர் சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுகுணா. இவர்களது மூத்த மகன் சண்முகவிக்னேஷ்(31) கீரைத்துறை பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்திருக்கிறார். இளைய மகன் விஜயகிருஷ்ணன் கோவையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை தீனதயாளன், அவரது மகன் சண்முகவிக்னேஷ் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சுகுணா மட்டும் தனியாக இருந்தார். அவரும் பகல் 11 மணி அளவில் பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரது வீட்டுக்குள் பின்கதவை உடைத்து, மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர்.
பீரோவில் இருந்த 31 பவுன் தங்க நகைகள், ¼ கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் வீடு திரும்பிய சுகுணா பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதில் இருந்த நகை, பணம் கொள்ளை போனதை அறிந்து, உடனே இது குறித்து அவர் தனது கணவருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story