கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சி தொடர்பாக கோட்டாட்சியர் ஆலோசனை - பாரம்பரிய முறைப்படி நடத்த பக்தர்கள் சங்கம் வலியுறுத்தல்


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சி தொடர்பாக கோட்டாட்சியர் ஆலோசனை - பாரம்பரிய முறைப்படி நடத்த பக்தர்கள் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Oct 2020 3:27 PM IST (Updated: 23 Oct 2020 3:27 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை நிகழ்ச்சி தொடர்பாக கோட்டாட்சியர் ஆலோசனை நடத்தினார். அப்போது, பாரம்பரிய முறைப்படி நடத்த பக்தர்கள் சங்கம் வலியுறுத்தினர்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின் 10-ம் நாளான விஜயதசமி அன்று பரிவேட்டை திருவிழா விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் கோவிலில் இருந்து பரிவேட்டைக்கு சாமி புறப்பட்டுச் செல்வார். காலையில் புறப்படும் ஊர்வலம் மாலையில் மகாதானபுரத்துக்கு சென்றடையும். பினனர் அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பரிவேட்டை திருவிழாவை பகவதி அம்மன் கோவிலிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் பாரம்பரிய முறைப்படி மகாதானபுரத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என பக்தர்கள் சங்கத்தினரும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்தனர். அவ்வாறு நடத்த அனுமதி அளிக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பரிவேட்டை நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக நேற்று நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பக்தர்கள் சங்கத்தினர் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு கோட்டாட்சியர் மயில் தலைமை தாங்கினார். இதில் கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு பாஸ்கரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோலப்பன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், பக்தர்கள் சங்க தலைவர் வேலாயுதன், செயலாளர் முருகன், பொருளாளர் நாதன், சட்ட ஆலோசகர் அசோகன், பா.ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அதிகாரிகள் தரப்பில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பரிவேட்டை நிகழ்ச்சியை எளிய முறையில் நடத்த அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் பக்தர்கள் சங்கத்தினரும், இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பரிவேட்டை நிகழ்ச்சியை வழக்கம் போல் பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்ட முடிவில் பக்தர்கள் சங்க சட்ட ஆலோசகர் அசோகன் கூறியதாவது:-

பரிவேட்டை நிகழ்ச்சியின் போது பக்தர்களாகிய நாங்கள் யாரும் ஊர்வலமாக செல்ல மாட்டோம். வழியில் இடைநிறுத்தமும் இருக்காது. வழியில் பக்தர்கள் சுருள் மற்றும் தேங்காய் பழம் கொடுத்து அர்ச்சனையும் செய்ய மாட்டார்கள். வழியோர ஊர் மக்களிடமும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க நாங்கள் அறிவுறுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தயாராக இருக்கிறோம். எனவே சாமி சிலையை குதிரை வாகனத்தில் வைத்து பாரம்பரிய முறைப்படி தோளில் சுமந்து செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த வாகனத்தை 8 பேர் சுமந்து செல்வார்கள்.

8 பேர் மாற்று ஆட்களாக வாகனத்தில் செல்வார்கள் என்றோம். அதற்கு அதிகாரிகள் கொரோனா விதிமுறைப்படி 4 பேர் தான் சாமி சிலையை சுமந்து செல்ல அனுமதிக்கப்படும் என்றார்கள். ஆனால் இந்த குதிரை வாகனத்தை சுமந்து செல்ல 8 ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதற்கு அதிகாரிகள், இதுதொடர்பாக கலெக்டரிடம் ஆலோசித்த பிறகுதான் முடிவு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்கள். எனவே அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.

Next Story