மாவட்ட செய்திகள்

வடலூர் அருகே பஸ் மீது கார் மோதல்; 2 பேர் பலி + "||" + Near Vadalur Car collision on bus 2 killed

வடலூர் அருகே பஸ் மீது கார் மோதல்; 2 பேர் பலி

வடலூர் அருகே பஸ் மீது கார் மோதல்; 2 பேர் பலி
வடலூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் பலியாகினர்.
வடலூர்,

தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி அருகே மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மனைவி சுந்தரி (வயது 52). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரை, அதே ஊரைச்சேர்ந்த உறவினரான டிரைவர் பிரேம்குமார்(38) என்பவர் சிகிச்சைக்காக காரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர்களுடன் உறவினரான பூமிநாதன் மகள் ஜீவிதா (21) என்பவரும் சென்றார். இந்நிலையில் சிகிச்சை முடிந்ததும் 3 பேரும் அதே காரில் ஊருக்கு புறப்பட்டனர். கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆண்டிக்குப்பம் பகுதியில் சென்றபோது பிரேம்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளில் சிக்கி பிரேம்குமாரும், ஜீவிதாவும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.


சுந்தரி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான பிரேம்குமார், ஜீவிதா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.