டிரைவர்களை தாக்கி ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை: மத்திய பிரதேச கும்பலுக்கு தொடர்பு தனிப்படை போலீசார் விரைந்தனர்


டிரைவர்களை தாக்கி ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை: மத்திய பிரதேச கும்பலுக்கு தொடர்பு தனிப்படை போலீசார் விரைந்தனர்
x
தினத்தந்தி 23 Oct 2020 2:48 PM GMT (Updated: 23 Oct 2020 2:48 PM GMT)

செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

கிருஷ்ணகிரி,

சூளகிரி அருகே டிரைவர்களை தாக்கி ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்கு விரைந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலஜபாத், காட்டவாக்கத்தில் பிளக்ஸ்டிரானிக்ஸ் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் நிறுவனம் என்ற தனியார் செல்போன் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கிருந்து மராட்டிய மாநிலம் ஜியாமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் நிறுவனம் என்ற தனியார் செல்போன் நிறுவனத்திற்கு ஜியாமி செல்போன்களை ஏற்றிக் கொண்டு டி.எச்.எல். நிறுவனத்தின் பார்சல் சர்வீஸ் கன்டெய்னர் லாரி கடந்த 20-ந் தேதி இரவு புறப்பட்டது.

மராட்டிய மாநில பதிவு எண் கொண்ட இந்த லாரியை கோவையை சேர்ந்த டிரைவர் அருண்குமார் (34) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக சென்னை பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஷா (வயது 29) என்பவர் இருந்தார். இந்த கன்டெய்னர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலை என்னும் இடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 10 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 லாரிகளில் கன்டெய்னர் லாரியை பின் தொடர்ந்து வந்து கன்டெய்னர் லாரியை வழிமறித்தது. பின்னர் டிரைவர்கள் அருண்குமார், சதீஷ்குமார் ஆகியோரை தாக்கி விட்டு கட்டி போட்டு விட்டு சாலையோர புதரில் வீசி விட்டு செல்போன்கள் ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியை கடத்தி சென்றது. பின்னர் அந்த லாரியை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலகுபாவி என்ற இடத்தில் நிறுத்தி விட்டு அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த கொள்ளை குறித்து தகவல் அறிந்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை ஆய்வு சென்தனர். இதில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கொள்ளை குறித்து தகவல் அறிந்த கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் ஆகியோர் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அவர்கள் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

இந்த கொள்ளை குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிப்பதற்காக மத்திய பிரதேச மாநிலத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

Next Story