ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க உணவில் அயோடின் உப்பை பயன்படுத்த வேண்டும் - விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்


ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க உணவில் அயோடின் உப்பை பயன்படுத்த வேண்டும் - விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்
x

ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க உணவில் அயோடின் உப்பை பயன்படுத்த வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் உலக அயோடின் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சரத்குமார் தலைமை தாங்கினார். நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதியழகன், நகர சுகாதார செவிலியர் லட்சுமி, செவிலியர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தர்மபுரி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், அயோடின் சத்துக்குறைபாட்டின் காரணமாக மூளை வளர்ச்சி பாதிப்பு, மாலைக்கண்நோய், முன் கழுத்து கழலை, கருச்சிதைவு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க அயோடின் கலந்த உப்பு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கடைகளில் அயோடின் உள்ள உப்பை கேட்டு வாங்கி பயன்படுத்த வேண்டும். அயோடின் உப்பு எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டதால் அதனை திறந்து வைக்கக் கூடாது. கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களில் மூடிய நிலையில் வைத்து பயன்படுத்த வேண்டும் என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அயோடின் சத்து அதிகமுள்ள பழங்கள், தானிய வகைகள், பால், இறைச்சி, கடல் மீன் உள்ளிட்ட உணவு பொருட்களை பொதுமக்கள் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து அயோடின் பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Next Story