கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி - கலெக்டர் மலர்விழி உத்தரவு


கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி - கலெக்டர் மலர்விழி உத்தரவு
x
தினத்தந்தி 23 Oct 2020 3:02 PM GMT (Updated: 23 Oct 2020 3:02 PM GMT)

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் நேற்று பிற்பகல் முதல் அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு சுற்றுலா பயணிகளை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று (நேற்று) பிற்பகல் முதல் அனுமதி வழங்கப்படுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கும், தமிழ்நாடு ஓட்டல் விடுதியில் தங்கவும், மீன் உள்ளிட்ட உணவு பொருட்களை சாப்பிடவும், மசாஜ் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஒகேனக்கல் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் சோதனைச்சாவடியில் கொரோனா அறிகுறிகள் உள்ளதா? என மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை நடத்தப்பட்டு அதன் பிறகே அனுமதிக்கப்படுவார்கள். இதை கண்காணிக்க 4 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த மருத்துவ குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

சுற்றுலா பயணிகள், சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி, மணல் திட்டு வரை பரிசலில் சென்று நீர்வீழ்ச்சியை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பரிசலில் 3 சுற்றுலா பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். ஐந்தருவி, பொம்மசிக்கல், மாமரத்துகடவு ஆகிய பகுதிகளில் பரிசல் பயணம் செய்வதற்கும், தொங்கு பாலம் செல்வதற்கும், முதலை பண்ணை, பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்லவும் தடை நீடிக்கிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படும். ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நோய் பரவல் தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி கூறினார்.

இந்த ஆய்வின்போது கோவிந்தசாமி எம்.எல்.ஏ., பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் அற்புதம் அன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதால் 8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

8 மாதங்களுக்கு பிறகு ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், மசாஜ் செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story