சேலத்தில் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு


சேலத்தில் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி - மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு
x
தினத்தந்தி 23 Oct 2020 9:20 PM IST (Updated: 23 Oct 2020 9:20 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்து, அரசின் அனுமதி பெற்று, இத்திட்டத்தின் கீழ் ரூ.965 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் 81 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், மாநகர பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்கள் விளையாட்டு திறன் மற்றும் உடல் நலத்தினை மேம்படுத்திடும் வகையில் விளையாட்டு அரங்கம் அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் அஸ்தம்பட்டி மண்டலத்தில் 31-வது வார்டு கோட்டை சின்னசாமி தெரு பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நேற்று கோட்டை சின்னசாமி தெருவில் அமைக்கப்பட்டு வரும் உள்விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோட்டை சின்னசாமி தெரு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 1,376 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என இரண்டு தளங்களுடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

தரைத்தளத்தில் 1,034 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வாகன நிறுத்த பகுதியில் 20 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 90 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 1,034 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட முதல் தளத்தில் கூடைப்பந்து மைதானம், டேபிள் டென்னிஸ் கூடம், கேரம் விளையாட்டு கூடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இந்த விளையாட்டு அரங்கு சுத்திகரிப்பட்ட குடிநீர் வசதி, நவீன கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது என ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார். மேலும், இப்பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகர பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர் சிபிசக்ரவர்த்தி, உதவி பொறியாளர் ரவிசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story