தாயை பிரிந்த நிலையில் முதுமலையில் பராமரிக்கப்படும் குட்டியானை ஊழியர்கள், பாகன்களின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறது


தாயை பிரிந்த நிலையில் முதுமலையில் பராமரிக்கப்படும் குட்டியானை ஊழியர்கள், பாகன்களின் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறது
x
தினத்தந்தி 23 Oct 2020 4:11 PM GMT (Updated: 23 Oct 2020 4:11 PM GMT)

முதுமலையில் தாயை பிரிந்த குட்டியானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இது ஊழியர்கள், பாகன்களின் செல்லப் பிள்ளை யாக வலம் வருகிறது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு காட்டுயானைகள், புலிகள், மான்கள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள், காட்டெருமைகள் என பல வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டியானைகளை வனத்துறையினர் மீட்டு, பின்னர் தாயுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் சில சமயங்களில் தாய் யானை கிடைக்காத பட்சத்தில் குட்டியானையை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் வைத்து பராமரித்து வருகின்றனர். இதேபோன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை பிடித்து வந்து, அதற்கு முறையாக பயிற்சி அளித்து கும்கியாக மாற்றுகின்றனர். கடந்த ஆண்டு வரை 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயை பிரிந்த 2 மாத பெண் குட்டியானையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது. பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆனதால் பெண் குட்டியானையை வனத்துறை ஊழியர்கள் மற்றும் பாகன்கள் சிறப்பு கவனம் செலுத்தி பராமரித்து வருகின்றனர். இதனால் செல்லப்பிள்ளையாக தெப்பக்காடு முகாமில் பெண் குட்டியானை வளர்ந்து வருகிறது. மேலும் அதன் சேட்டைகளை கண்டு வனத்துறையினர், பாகன்கள் தினமும் ரசித்து வருகின்றனர். இதுகுறித்து பாகன் பொம்மன் கூறும்போது, சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வரும்போது மிகவும் மெலிந்த நிலையில் சிறிய குட்டியாக இருந்தது. பின்னர் ஊட்டச்சத்து மாவு, ராகி, கொள்ளு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு ஆரோக்கியமாக உள்ளது. செல்லமாக அம்மு என்று பெயரிட்டு அழைத்து வருகிறோம் என்றார்.

Next Story