பா.ஜனதாவில் இருந்து விலகிய ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைந்தார்
பா.ஜனதாவில் இருந்து விலகிய முன்னாள் மந்திரி ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைந்தாா்.
மும்பை,
மராட்டிய பா.ஜனதாவில் பலம்பெற்ற தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. கடந்த பா.ஜனதா ஆட்சியின் போது மாநில வருவாய் துறை மந்திரியாக இருந்தார். எனினும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். மேலும் அவருக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த அவர், கடந்த புதன்கிழமை பா.ஜனதாவில் இருந்து விலகியதாக அறிவித்தார். மேலும் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது வாழ்க்கையை அழிக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி இருந்தார். அன்றைய தினமே ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் இணைவார் என அந்த கட்சியின் மாநில தலைவரான மந்திரி ஜெயந்த் பாட்டீல் அறிவித்தார்.
தேசியவாத காங்கிரசில் சேர்ந்தார்
இந்தநிலையில் நேற்று மும்பையில் நடந்த விழாவில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முன்னிலையில் ஏக்நாத் கட்சே அந்த கட்சியில் இணைந்தார். மந்திரி ஜெயந்த் பாட்டீல், ஏக்நாத் கட்சேவுக்கு சால்வை அணிவித்து அவரை கட்சியில் வரவேற்றார். கட்சேவுடன் அவரது ஆதரவாளர்கள் சுமார் 70 பேரும் தேசியவாத காங்கிரசில் இணைந்தனர்.
அப்போது ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரசில் தன்னை இணைத்து கொண்ட சரத்பவாருக்கு நன்றி தெரிவித்தார்.
நினைத்து கூட பார்த்தது இல்லை
மேலும் அவர் பேசுகையில், “நான் 40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். நான் வளர்த்த கட்சியில் இருந்து வெளியேறுவேன் என நினைத்து கூட பார்த்தது கிடையாது. என் மீது மானபங்க வழக்குப்பதிவு செய்யப்பட்டது. என் வாழ்நாளில் 4 ஆண்டுகளை வீணடித்தேன். என் மீது நிலஅபகரிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. யாருக்கு எத்தனை மனைகள் உள்ளது என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். எனக்கு பல கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் எனது ஆதரவாளர்கள் தேசியவாத காங்கிரசில் நான் இணைய வேண்டும் என விரும்பினர். பா.ஜனதாவுக்கு உழைத்ததை விட 2 மடங்கு அதிகமாக தேசியவாத காங்கிரசுக்காக உழைப்பேன்” என்றார்.
இதேபோல சரத்பவார் பேசும்போது, “ஏக்நாத் கட்சே எந்த எதிர்பார்ப்பும் இன்றி கட்சியில் இணைந்து உள்ளார். அவரை கட்சியில் சேர்த்ததில் அஜித்பவார் உள்பட யாருக்கும் அதிருப்தி இல்லை” என்றார்.
Related Tags :
Next Story