தலைஞாயிறில், நகரும் நியாய விலைக்கடை - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தலைஞாயிறில் நகரும் நியாய விலைக்கடையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வாய்மேடு,
நாகை மாவட்டம் தலைஞாயிறு 3-ம் சேத்தி பழையாற்றங்கரையில் கூட்டுறவுத்துறை சார்பில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் வகையில் அம்மா நகரும் நியாயவிலைக்கடை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். நகரும் நியாய விலைக்கடையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். அதன்படி மாநிலம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் மூலம் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெற உள்ளார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு 262 அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் செயல்படுத்தபட உள்ளன. இதன் மூலம் 33,946 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். 175 குடும்ப அட்டைகள் வரை உள்ள கடைகள் 1 நாளும், 176-310 குடும்ப அட்டைகள் வரை உள்ள கடைகள் 2 நாட்களும், 310-க்கு மேல் குடும்ப அட்டைகள் உள்ள கடைகள் 3 நாட்களும் அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கும் பொருட்டு அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் செயல்பட உள்ளன. இந்த திட்டத்தினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பழையாற்றங்கரை பகுதியை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், துணைப்பதிவாளர்கள் கனகசபாபதி, முகமது நாசர், துணைப்பதிவாளர் (மயிலாடுதுறை) ராஜேந்திரன், தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் அவை.பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சார்பதிவாளர் முத்துராஜா உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து புதிதாக அலுவலகம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர், மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) ராஜாட்சத்ரவேதி, தாசில்தார் ரமாதேவி, ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், நாகை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் தங்க.கதிரவன், நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பக்கிரிசாமி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மைதிலி ராஜேஷ்குமார், ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு, திட்டச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அப்துல் பாசித், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் பொருளாளர் நடராசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story