நாகை சமரச மையத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட எல்.ஐ.சி. முகவருக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு - நீதிபதி வழங்கினார்


நாகை சமரச மையத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட எல்.ஐ.சி. முகவருக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு - நீதிபதி வழங்கினார்
x
தினத்தந்தி 23 Oct 2020 10:30 PM GMT (Updated: 23 Oct 2020 11:03 PM GMT)

நாகை சமரச மையத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட எல்.ஐ.சி. முகவருக்கு ரூ.16 லட்சத்திற்கான இழப்பீட்டுக்கான ஆணையை நீதிபதி வழங்கினார்.

நாகப்பட்டினம், 

நாகையை அடுத்த திருமருகலை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 45). இவர் எல்.ஐ.சி. காப்பீடு நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந்தேதி இவர் ஆக்கூர் முக்கூட்டு அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவருக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இழப்பீடு கேட்டு நாகை சார்பு நீதிமன்றத்தில் தமிழ்வாணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நாகை சார்பு மன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு சமரச மையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ., காப்பீடு நிறுவனம் தமிழ்வாணனுக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல் அளித்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட தமிழ்வாணனை அவரது குடும்பத்தினர் நேற்று சமரச மையத்திற்கு காரில் அழைத்து வந்தனர். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரகுமான், தமிழ்வாணனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற பின் ரூ.16 லட்சம் இழப்பீட்டிற்கான ஆணையை வழங்கினார். சமரச மையத்தில் 7 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.26 லட்சத்து 18 ஆயிரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

Next Story