அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை - சாலைமறியலிலும் ஈடுபட்டனர்
திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் சலாவுதீன், மாவட்ட பொருளாளர் இளங்கோவன், துணைத்தலைவர் சுந்தரய்யா, துணை செயலாளர் வேலவன், மாவட்டக்குழு உறுப்பினர் அருண்மல்லிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பழுதடைந்த ஜெனரேட்டரை புதுப்பித்து மின் தட்டுப்பாட்டை சீர்செய்ய வேண்டும். நிரந்தர ஊழியர்களுக்கு விடுப்பு கொடுத்து ஒப்பந்த ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். உள்நோயாளி அனைவருக்கும் படுக்கை வசதியை உறுதி செய்ய வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் கொரோனா தொற்று பரிசோதனை பிரிவிற்கு பயிற்சி மருத்துவர்களை அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட சுகாதார சீர்கேட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story