22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்


22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் - கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Oct 2020 10:00 PM GMT (Updated: 23 Oct 2020 11:39 PM GMT)

22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. தஞ்சை, பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம், திருவோணம், திருப்பனந்தாள் ஆகிய வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் திருவையாறு, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், அய்யம்பேட்டை, திருவிடைமருதூர் மற்றும் பாபநாசம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் கலெக்டர் கோவிந்தராவ் விளக்கம் அளித்தார். பிற துறை அலுவலர்கள் அவரவர் அலுவலகங்களில் இருந்தும் விளக்கம் அளித்தனர். தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டிற்கான கரும்பு அரவை பணியை டிசம்பர் மாதம் முதல்வாரத்தில் தொடங்க வேண்டும். அப்போது தான் வெட்டுக்கூலி குறையும். கரும்பு வெட்டுவதற்கு ஆட்கள் பற்றாக்குறையும் ஏற்படாது. குறுவை நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. 17 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மழை காலமாக இருப்பதால் ஈரப்பதத்தை தளர்வு செய்து 22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். குறுவை மற்றும் சம்பா அறுவடை நேரத்தில் நெல்லின் ஈரப்பதத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நாளை (இன்று) வரும் மத்தியக்குழுவினரிடம் கலெக்டர் எடுத்து கூற வேண்டும்.

நெடார் தர்மராஜன்: தோட்டக்காடு ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் வேளாண்மை கிடங்குடன் கூடிய அலுவலக கட்டிடம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, அமுதம் அங்காடி கட்டிடம் கட்ட வேண்டும். நெடார் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட கட்டிடம் கட்ட வேண்டும்.

மேற்கண்டவாறு விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதேபோல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளியுடன் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும். கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகளை களைய கிராமஅளவில் கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் பல்வேறு இடங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் முன்வைத்தனர்.

திருவையாறு உதவி வேளாண்மை அலுவலகம் மூலம் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருவையாறு பகுதி விவசாயிகளிடம் காணொலிக் காட்சி மூலம் கலெக்டர் கோவிந்தராவ் குறைகளை கேட்டார். அப்போது காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணைச்செயலாளர் சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் குறைகளை கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பிறகு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணை செயலாளர் சுகுமாரன் நிருபர்களிடம் கூறிய தாவது:-

திருவையாறில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க சாலை அமைக்க சாகுபடி நிலங்களை கையகப்படுத்து வதற்கு முனைப்பு காட்டுவதை விட ஏற்கனவே உள்ள பெரம்பலூர்-மானாமதுரை சாலையில் உள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு கூடுதலாக தேவைப்படும் இடத்தை அந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். இதற்கு பதில் விளை நிலங்களை புறவழிச்சாலைக்கு எடுப்பதை நிறுத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு நேரத்தில் வெளிமாவட்ட நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும். நெல் கொள்முதல் நிலையத்தில் ஈரப்பதத்தின் அளவினை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story