ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை - காரில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்
பொன்னேரி அருகே காரில் வந்த மர்மகும்பல் ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்குன்றம்,
பொன்னேரி அருகே இலவம்பேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கன்டெய்னர் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு நேற்று தொழிலாளர்கள் வேலை செய்து கொண் டிருந்தனர். அப்போது 35 வயது வாலிபர் ஒருவர், காரில் வந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த கன்டெய்னர் கம்பெனி ஊழியர்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பொன்னேரி போலீசார் விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாலிபரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்த வாலிபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கொலை செய்யப்பட்டவர் திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன் (வயது 35) என்பதும், ரியல் எஸ்டேட் அதிபர் என்பதும் தெரிந்தது.
தொழில் போட்டியில் மர்மநபர்கள் காரில் வந்து சரவணனை வெட்டிக்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், பொன்னேரி டி.எஸ்.பி. கல்பனாதத் ஆகியோர் கொலை நடந்த இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். காரில் தப்பிச்சென்ற கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கினால்தான் சரவணன் கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story