பள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்


பள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம்
x
தினத்தந்தி 23 Oct 2020 11:50 PM GMT (Updated: 23 Oct 2020 11:50 PM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் செய்யப்பட்டது.

தென்காசி,

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கொரோனாவால் நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. இதையொட்டி அரசு வழிகாட்டுதலின்படி அவர்களது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்டு மாதம் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் நெல்லை மாவட்டத்தில் 309 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 27 ஆயிரத்து 78 மாணவ-மாணவிகள் 10-ம் வகுப்பு படிப்பை நிறைவு செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 139 பேர், நெல்லை கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 174 பேர், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 765 பேர் என மொத்தம் 27 ஆயிரத்து 78 பேர் 10-ம் வகுப்பை படித்து முடித்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக, அதாவது 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 188 மாணவர்களும், 8ஆயிரத்து 161 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 349 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

இதில் தென்காசி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 960 மாணவர்களும், 4 ஆயிரத்து 731 மாணவிகளும், சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 498 மாணவர்களும், 3 ஆயிரத்து 430 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதிப்பெண் சான்றிதழ்

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி துறையின் சார்பில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் நேற்று வினியோகிக்கப்பட்டன.

மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மதிப்பெண் சான்றிதழை வழங்கினர். அதனை மாணவ- மாணவிகள் வாங்கி ஆர்வத்துடன் பார்த்தனர். நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியை வழங்கினார்.

இதேபோல் நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாளையங்கோட்டை சேவியர், ஜான்ஸ், சாராள் தக்கர், மேரிசார்ஜெண்டு மேல்நிலைப்பள்ளிகளில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேலைவாய்ப்பு பதிவு

மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மேற்கொள்ள பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பள்ளிகளில் இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டது. மாணவ-மாணவிகள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, செல்போன் நம்பர், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கொண்டு வந்து மதிப்பெண் சான்றிதழுடன் வேலைவாய்ப்பு பதிவுகளை செய்தனர். பள்ளிகளில் வருகிற 6-ந்தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு செய்பவர்களுக்கு ஒரே பதிவு மூப்பு வழங்கப்படுகிறது.

Next Story