வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தென்காசி மாவட்டத்தில் அணைகள் விரிவாக்கம் செய்யப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க தென்காசி மாவட்டத்தில் அணைகள் விரிவாக்கம் செய்யப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 23 Oct 2020 11:58 PM GMT (Updated: 23 Oct 2020 11:58 PM GMT)

வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை கூடுதலாக சேமிக்கும் வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகள் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தென்காசி,

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடிவரும் ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டி தண்ணீரை சேமித்து, விவசாயம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் பாபநாசத்தின் மேல் பகுதியில் காரையாறு பகுதியில் முதல் அணை கட்டப்பட்டது. அதை தொடர்ந்து மணிமுத்தாறு, சேர்வலாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் அடுத்தடுத்து கட்டப்பட்டன. இவை அந்தந்த பகுதி விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகின்றன.

தற்போது நெல்லையில் இருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அப்போது கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகள் தென்காசி மாவட்ட எல்லைக்குள் அமைந்தன. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளை ஒப்பிடும்போது இந்த 5 அணைகளும் மிகவும் சிறிய அணைகள் ஆகும். இந்த 5 அணைகளின் நீர்கொள்ளவை சேர்த்தாலும் பாபநாசம் அணையின் 6-ல் ஒரு பங்குதான் வருகிறது.

3 முறை நிரம்பின

இதை பார்க்கும்போது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் 5 அணைகளும் பெயரளவுக்குத்தான் இருக்கிறது. பெரும்பகுதி குடிநீர் ஆதாரத்துக்கு தாமிரபரணி ஆற்றையே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

தென்காசி மாவட்டம் புதிய குழந்தையாய் பிறந்த பூரிப்பில், இந்த ஆண்டில் இதுவரை 5 அணைகளும் 3 முறை நிரம்பி வழிந்துள்ளது. குண்டாறு அணை நிரம்பி பல மாதங்களாக உபரிநீர் வெளியேறி கொண்டே இருக்கிறது. இதேபோல் மற்ற அணைகளும் தற்போது நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வீணாக பாய்ந்து க டலுக்கு செல்கிறது. விரைவில் வடகிழக்கு பருவமழை பெய்ய இருக்கிறது. ஏற்கனவே நிரம்பியுள்ள இந்த அணைகளில் இனி ஒரு சொட்டு தண்ணீரை கூட தேக்கி வைக்க முடியாது. தமிழகத்துக்கு வடகிழக்கு பருவமழையால் அதிகளவு தண்ணீர் கிடைக்கும். ஆனால் அதனை தேக்கி வைக்க வழியில்லை.

வீணாகும் தண்ணீர்

இந்த நேரத்தில் அணைகளில் கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் கொள்ளளவை அதிகரிக்க அணைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 5 அணைகளும் பெரிய குளங்கள் போல்தான் நீர் கொள்ளளவு கொண்டதாக உள்ளது.

இதில் கடனா அணை மட்டும் சற்று பெரியது ஆகும். அதுவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டதன் விளைவாக தற்போது 352 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கும் அளவுக்கு உள்ளது. ராமநதி 152, கருப்பாநதி 185, அடவிநயினார் 174 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாக உள்ளது. குண்டாறு கொள்ளளவு 18.43 மில்லியன் கனஅடி மட்டுமே ஆகும். மிக குறைந்த அளவு தண்ணீரே தேக்கி வைக்கும் வகையில் இந்த அணைகள் கட்டப்பட்டதால் அதிகளவு மழை பெய்யும்போது தண்ணீர் வீணாகி விடுகிறது. பல டி.எம்.சி. தண்ணீர் வங்க கடலில் வீணாக சென்று கலக்கிறது. மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலையில், கோடையில் தண்ணீர் இன்றி விவசாயிகள் தவிக்கிறார்கள்.

விரிவாக்கம் செய்யப்படுமா?

எதிர்காலம் தண்ணீர் தேவைக்கு சண்டையிட்டு கொள்ளும் என்று கூறப்படுகிறது. ஆனால், நம்மிடம் மழை வளம் அதிகமாக இருந்தபோதிலும், அதன்மூலம் கிடைக்கும் தண்ணீரை முழுமையாக சேமித்து வைத்து குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருக்கிறோம் என்று கூறலாம். மக்கள் தொகை பெருக்கத்தால் வருங்காலத்தில் குடிநீர் திட்டங்கள் அதிகளவு செயல்படுத்தப்படும். ஆனால் அதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போகும். ‘அணையில் இருந்தால்தான் உறைகிணற்றில் தண்ணீர் எடுக்க முடியும்’ என்று புதிய மொழி பகிரப்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

தற்போது ராமநதி அணையில் இருந்து வீணாகும் உபரி நீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு சென்று பயன்படுத்தும் வகையில் ராமநதி மேல்மட்ட கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதுதவிர கடனாநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 4 அணைகளில் கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்குரிய சாத்தியக்கூறுகளை தென்காசி மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உடனடியாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

தொலைநோக்கு சிந்தனையுடன் இந்த பணியை செய்ய வேண்டும். ஒருசில ஆண்டுகளில் அணைகள் நிரம்பாமல் போனதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அதிக மழை பெய்யும்போது கிடைக்கும் தண்ணீரை முழுமையாக சேமிக்கும் வகையில் திட்டத்தை தீட்ட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும், மேற்கு தொடர்ச்சி மலையில் ஆங்காங்கே உள்ள சிறிய ஆறுகளின் குறுக்கேயும் புதிய அணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story