மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.3¼ கோடி மதிப்பிலான போர்வைகள் அமைச்சர் அனுப்பி வைத்தார்


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்துக்கு ரூ.3¼ கோடி மதிப்பிலான போர்வைகள் அமைச்சர் அனுப்பி வைத்தார்
x

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு ரூ.3¼ கோடி மதிப்பிலான போர்வைகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்.

ஈரோடு, 

தெலுங்கானா மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் தெலுங்கானா மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெலுங்கானா மாநிலத்துக்கு அனுப்ப நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் போர்வைகள் அனுப்பப்பட்டு உள்ளது. ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பிலான இந்த போர்வைகள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

அமைச்சர் அனுப்பி வைத்தார்

நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, இ.எம்.ஆர்.ராஜா, எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு ஒரு லட்சம் போர்வைகளை கொண்டு செல்லும் 6 லாரிகளை கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

அவர் கூறும்போது, ‘பேரிடர் துயர் துடைப்பு நிதியின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் போர்வைகள் வழங்கப்படுகின்றன. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவை வழங்கப்படும்’ என்றார்.

இதில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, சிந்தாமணி தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கோவிந்தராஜ், தங்கமுத்து, கேசவமூர்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வீரக்குமார், மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் நந்தகோபால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர்.பாலாஜி, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகக்குழு இயக்குனர் எஸ்.பி.ரமேஷ், மண்டல மேலாளர் கே.அருள்ராஜன், மேலாளர்கள் டி.நந்தகோபால், விமல்ராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

Next Story