கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகள்: சரக்கு ரெயிலில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி மும்முரம்


கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகள்: சரக்கு ரெயிலில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 23 Oct 2020 10:30 PM GMT (Updated: 24 Oct 2020 2:34 AM GMT)

கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 58 ஆயிரத்து 948 எக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 55 ஆயிரத்து 748 எக்டேரில் அறுவடை பணி முடிவடைந்துள்ளது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய 299 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம். அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து குவியல், குவியலாக குவித்து வைத்துள்ளனர். இந்த நெல்லை இரவு, பகலாக விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.

அவ்வப்போது பெய்த மழையினால் நெல் நனைந்தது. இதனால் நெல்லின் ஈரப்பதம் அதிகமானது. ஈரமான நெல்லை சாலைகளில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லின் ஈரப்பதத்தை தளர்த்தி 22 சதவீத ஈரப்பதம் வரை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மழையில் நெல் மூட்டைகள் நனையும் நிலை ஏற்பட்டது. நெல்மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்லாததால் கொள்முதல் பணியும் பாதிக்கப்பட்டது. இதனால் நெல் மூட்டைகளை எடுத்து செல்ல வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கும், சரக்கு ரெயில் மூலம் பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

பின்னர் இந்த நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்குரெயிலில் ஏற்றினர். மொத்தம் 2 ஆயிரம் டன் நெல், 42 வேகன்களில் ஏற்றப்பட்டது. பின்னர் இந்த சரக்குரெயில் சிவகங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று(சனிக்கிழமை) மதுரைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story