கலெக்டர் அலுவலகத்தில் வைப்பதற்காக பிரதமர் மோடி புகைப்படத்துடன் வந்த பா.ஜ.க.வினர் - வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை


கலெக்டர் அலுவலகத்தில் வைப்பதற்காக பிரதமர் மோடி புகைப்படத்துடன் வந்த பா.ஜ.க.வினர் - வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 24 Oct 2020 3:30 AM IST (Updated: 24 Oct 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைப்பதற்காக வந்த பா.ஜ.க.வினருடன் வருவாய் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் பா.ஜ.க. தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பிரதமரின் புகைப்படம் வைப்பதற்காக அதனை எடுத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே செல்லவிடாமல் அவர்களை தடுத்தனர்.

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பிரதமரின் புகைப்படம் வைப்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும் எனவும், 27-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும் எனவும் கோட்டாட்சியர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

Next Story