ஆயுத பூஜையையொட்டி கரூரில் வாழைத்தார் விற்பனை ‘ஜோர்’


ஆயுத பூஜையையொட்டி கரூரில் வாழைத்தார் விற்பனை ‘ஜோர்’
x
தினத்தந்தி 23 Oct 2020 10:00 PM GMT (Updated: 2020-10-24T09:09:32+05:30)

ஆயுத பூஜையையொட்டி கரூர் காமராஜ் மார்க்கெட்டில் வாழைத்தார்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

கரூர்,

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஆயுத பூஜையும் ஒன்றாகும். இந்நாளில், நம்மை வாழ வைத்த எந்திரங்களுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டும், சந்தனம், குங்குமம் வைத்தும், பழங்கள், தேங்காய், பொரி, கடலை, சுண்டல், பொங்கல் போன்றவை படைத்தும் பூஜைகள் போடப்படுகிறது. அந்த பூஜை பொருட்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், நாம் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்கள், வருமானத்தை ஈட்டித் தரும் பஸ்கள், ஆட்டோக்கள், சரக்கு ஆட்டோக்கள், டிராக்டர்கள் போன்றவற்றுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. வீடுகளில் உள்ள பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டு பூஜை போடப்படுகிறது. இவ்வாறு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆயுத பூஜை நாளையும்(ஞாயிற்றுக்கிழமை), விஜயதசமி நாளை மறுதினமும்(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

பூஜையில் தேங்காய், வாழைப்பழம் முக்கியமாக இடம் பெறும். இதனால், வாழைப்பழம் தேவை அதிகரித்து உள்ளது. அந்தவகையில் கரூர் காமராஜ் மார்க்கெட்டில் உள்ள வாழைக்காய் மண்டியில் ஆயுத பூஜைக்காக வாழைத்தார்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இங்கு மோகனூர், வேலூர், லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி, புதுக்கோட்டை போன்ற இடங்களில் இருந்து விற்பனைக்காக வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மொத்த வியாபாரிகளிடமிருந்து வாழைத்தார்கள் ஓரிரு தினங்களுக்கு முன்னரே சில்லரை வியாபாரிகள் வாங்கி சென்று, பழுக்க வைத்து பழங்களாக விற்பனை செய்கின்றனர். இதனால், வாழைத்தார்களின் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. மார்க்கெட்டில் (மொத்த வியாபாரம்) விற்பனை செய்யப்படும் வாழைத்தார்களின் விலை விவரம்:

பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.250-ல் இருந்து ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல, ரஸ்தாளி ரூ.300 முதல் ரூ.400 வரையும், கற்பூரவல்லி ரூ.400 முதல் ரூ.450 வரையும், பச்சை வாழை ரூ.250 முதல் ரூ.300 வரையும், மோரிஸ் ரூ.300 முதல் 400 வரையும், செவ்வாழை ரூ.700 முதல் ரூ.900 வரையும் விற்பனை ஆகிறது.

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த விவசாயிகளுக்கு இந்த விலை சற்று ஆறுதல் அளித்தாலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சுமார் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை விற்பனை குறைந்தே காணப்படுவதாகவும், இன்றும்(சனிக்கிழமை), நாளையும் விற்பனை அதிகரிக்கலாம் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story