விற்பனை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜி கார்னரில் வியாபாரம் செய்ய பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் மனு - திருச்சி காந்தி மார்க்கெட் விவகாரத்தில் தொடரும் சர்ச்சை


விற்பனை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜி கார்னரில் வியாபாரம் செய்ய பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் மனு - திருச்சி காந்தி மார்க்கெட் விவகாரத்தில் தொடரும் சர்ச்சை
x
தினத்தந்தி 24 Oct 2020 4:15 AM IST (Updated: 24 Oct 2020 9:17 AM IST)
t-max-icont-min-icon

பொன்மலை ஜி கார்னர் மார்க்கெட்டில் விற்பனை நிறுத்தம் செய்யப்படும் என வியாபாரிகள் அறிவித்துள்ள நிலையில் அங்கு வியாபாரம் செய்வதற்கு பாதுகாப்பு கேட்டு இன்னொரு சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதனால் காந்தி மார்க்கெட் பிரச்சினையில் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது.

திருச்சி,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. காந்தி மார்க்கெட்டில் நடைபெற்றுவந்த மொத்த வியாபாரம் பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. ஜி கார்னர் ரெயில்வே மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை, மழை பெய்தால் காய்கறிகள் சேதமடைகின்றன. எனவே தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் எல்லாம் திறக்கப்பட்டு இருப்பதைப்போல திருச்சி காந்தி மார்க்கெட்டையும் திறக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் காந்தி மார்க்கெட்டை திறக்கக்கூடாது காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்காக கட்டப்பட்ட கள்ளிக்குடி வணிக வளாகத்தில் வியாபாரம் செய்வதற்கு அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, காந்தி மார்க்கெட்டை திறப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு வருகிற 28-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. இதனால் காந்தி மார்க்கெட்டில் மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் 27 சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் பொன்மலை ஜி கார்னரில் ஒரு கூட்டத்தை நடத்தினர்.

கூட்டத்தில், காந்தி மார்க்கெட்டை மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறக்க வேண்டும். ஐகோர்ட்டில் வியாபாரிகளுக்கு சாதகமாக மாவட்ட நிர்வாகம் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோரி 25-ந் தேதி (நாளை) முதல் 4 நாட்கள் காய்கறி விற்பனையை நிறுத்தும் போராட்டம் நடத்த போவதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திருச்சி மாவட்ட அனைத்து காய்கறி வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தை சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்து ஜி கார்னர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்டு ஒரு மனு கொடுத்தனர்.

இதுபற்றி அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில் ‘பொன்மலை ஜி கார்னர் தற்காலிக மார்க்கெட்டில் வழக்கம்போல் வியாபாரம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அங்கு மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் எல்லாம் நடைபெறும். காந்தி மார்க்கெட் திறப்பு தொடர்பான வழக்கு மதுரை கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் இந்த நேரத்தில் இதுபோன்ற ஒரு போராட்டம் தேவையில்லாதது. மேலும் காந்தி மார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைத்து அந்த இடத்தில் வியாபாரம் நடத்துவதற்கு அனுமதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியளித்து இருக்கிறது. எனவே இப்போதைக்கு காய்கறி விற்பனை நிறுத்த போராட்டம் தேவையில்லை. நாங்கள் வழக்கம்போல் வியாபாரம் செய்வோம்‘ என்றார்.

ஜி கார்னர் மார்க்கெட்டில் விற்பனை நிறுத்தம் என ஒரு பிரிவினரும் வழக்கம்போல் வியாபாரம் செய்யப்படும் என இன்னொரு பிரிவினரும் கூறியிருப்பது காந்தி மார்க்கெட் விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Next Story