மணல் திருடியபோது தப்பிச்செல்ல முயன்று படுகாயம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த டிரைவர் தப்பி ஓட்டம்


மணல் திருடியபோது தப்பிச்செல்ல முயன்று படுகாயம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த டிரைவர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2020 10:30 AM IST (Updated: 24 Oct 2020 11:00 AM IST)
t-max-icont-min-icon

மணல் திருடியபோது தப்பிச்செல்ல முயன்று படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

ராமநாதபுரம்,

சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் கடந்த 18-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எம்.கரிசல்குளம் முதல் கடலாடி ரோடு பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை கண்டனர். இதனை தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்து சென்றபோது போலீசாரை கண்டதும் ஜே.சி.பி. டிரைவர் கடலாடி ஏ.வேப்பங்குளம் போஸ் மகன் ராமர் (வயது39) மற்றும் டிராக்டர் டிரைவர் ஆகியோர் வாகனங்களை போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

இதில் ராமர் ஜே.சி.பி.யில் இடித்ததில் தலையில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தார்.ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்த ராமர் குணமடைந்ததும் மணல்திருட்டு வழக்கில் கைது செய்வதற்காக 2 போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு தயார்நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை தன்னை கைது செய்ய இருப்பதை அறிந்த ராமர் போலீசாரிடம் சிறுநீர் கழித்துவிட்டு வருவதாக கூறிசென்று திடீரென்று மாயமானார். இதனால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று அஞ்சி போலீசாரை ஏமாற்றிவிட்டு கைதாகாமல் நோயாளிகள் கூட்டத்தோடு கூட்டமாக நைசாக தப்பி ஓடிய ராமரை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story