மதுரை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பெண்கள் கருகி சாவு - மேலும் 3 பேர் படுகாயம்


மதுரை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பெண்கள் கருகி சாவு - மேலும் 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Oct 2020 6:00 AM GMT (Updated: 24 Oct 2020 5:54 AM GMT)

மதுரை அருகே பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பெண்கள் உடல் கருகி பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பேரையூர்,

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகே உள்ள செங்குளத்தை அடுத்து, சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த ஆலையில் சுமார் 40 பேர் வேலை செய்தனர்.

நேற்று மதியம் ஆலையில் உள்ள ரசாயன பொருட்கள் வைத்து இருக்கும் அறையில் இருந்து வெடி மருந்துகள் 100 அடி தூரத்தில் உள்ள மற்றொரு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு வெடிமருந்து பவுடர்களை சல்லடையில் அலசி கொண்டிருந்த போது திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு தீப்பற்றியது.

இதைதொடர்ந்து அருகில் உள்ள அறைகளுக்கும் தீ பரவியது. இந்த சம்பவத்தில் மொத்தம் உள்ள 5 அறைகளில் 3 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின.

இதில் 2 அறைகளில் வேலை செய்து கொண்டிருந்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள். மேலும் 2 பெண்கள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

இதுபற்றி குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதை தொடர்ந்து சம்பவத்துக்கான காரணம் குறித்தும், பலியானவர்கள் யார்? என்பதை அறியவும் போலீசார் விசாரணை நடத்தினர். பலியான பெண்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன் விவரம் வருமாறு:-

பேரையூர் அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி வேலுத்தாயி (வயது 45), டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காடனேரியை சேர்ந்த கருப்பையா மனைவி அய்யம்மாள் (65), சிலார்பட்டியை சேர்ந்த பாண்டி மனைவி லட்சுமி, விருதுநகர் மாவட்டம் கோவிந்தநல்லூரை சேர்ந்த சுருளியம்மாள், அத்திப்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரம் மனைவி காளீஸ்வரி(35) என்பதும், படுகாயம் அடைந்தது, காடனேரியை சேர்ந்த மகாலட்சுமி(45), லட்சுமி(45), விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி(39) என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே வெடி விபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Next Story