மாவட்ட செய்திகள்

சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி கலெக்டர் ஷில்பா தகவல் + "||" + For small food processing companies Rs 10 lakh financial assistance Collector Shilpa Info

சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி கலெக்டர் ஷில்பா தகவல்

சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி கலெக்டர் ஷில்பா தகவல்
மத்திய அரசின் திட்டத்தில் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற வாய்ப்பு உள்ளது என மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் பாரத பிரதமர் நுண்ணிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


பாரத பிரதமர் நுண்ணிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில்துறை வழியாக தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இத்திட்டம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகு முறையில் செயல்படுத்தப்படும்.

உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படும். மேலும் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவற்றுக்கும் நிதி உதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம் தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற வாய்ப்பு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் அப்பளம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திரபாண்டியன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகேசன், வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) முருகானந்தம், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் அனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சரவணன், நபார்டு வங்கி மேலாளர் சலீமா, தோட்டக்கலை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அதிகம் வாசிக்கப்பட்டவை