மாவட்ட செய்திகள்

நாங்குநேரி தொகுதி மக்களுக்காக பாடுபட்டவர்: “உழைப்பால் உயர்ந்தவர் வசந்தகுமார்” நெல்லையில் நடந்த படத்திறப்பு விழா + "||" + Who fought for the people of Nanguneri block Superior by labor Vasanthakumar Opening ceremony at Nellai

நாங்குநேரி தொகுதி மக்களுக்காக பாடுபட்டவர்: “உழைப்பால் உயர்ந்தவர் வசந்தகுமார்” நெல்லையில் நடந்த படத்திறப்பு விழா

நாங்குநேரி தொகுதி மக்களுக்காக பாடுபட்டவர்: “உழைப்பால் உயர்ந்தவர் வசந்தகுமார்” நெல்லையில் நடந்த படத்திறப்பு விழா
“உழைப்பால் உயர்ந்தவர் வசந்தகுமார்“ என்று நெல்லையில் நடந்த உருவப்படம் திறப்பு விழாவில் காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய்தத் புகழாரம் சூட்டினார்.
நெல்லை,

மறைந்த எம்.பி. வசந்தகுமார் உருவப்படம் திறப்பு விழா, சட்டமன்ற தேர்தல் ஆயத்தபணி தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது.

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் பிரமுகர் ரூபி மனோகரன், தென்காசி மாவட்ட தலைவர் பழனி நாடார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் வரவேற்று பேசினார்.


சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் கலந்து கொண்டு, வசந்தகுமார் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு அதிகம் பாடுபட்டவர் வசந்தகுமார். அவர் படிப்படியாக உழைப்பால் வாழ்க்கையில் உயர்ந்தவர். நாங்குநேரி தொகுதி மக்களுக்கும், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். அவர், காந்தி கொள்கையில், காமராஜர் வழியில் நடந்தவர் என்பது அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. கொரோனா தொற்று குறைந்தாலும் நீங்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

தமிழக சட்டசபைக்கு இன்னும் 5 மாதங்களுக்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாம் ஒன்று கூடி சிறப்பாக பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி என்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதோடு சென்று விட்டது. ஆனால், ரூபிமனோகரன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பேசுகையில், “வசந்தகுமார் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர். அவருடைய மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு. நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமார் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். தற்போது ரூபி மனோகரன் அந்த தொகுதியில் களப்பணியாற்றி, கிராமங்கள் தோறும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறார்“ என்றார்.

வசந்தகுமாரின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான விஜய்வசந்த் பேசுகையில், “நெல்லை மாவட்டம் தான் எனது தந்தையை அரசியலில் வெற்றி பெற வைத்தது. நாங்குநேரி தொகுதி மக்கள் தான் எனது தந்தையை முதலில் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள். அந்த மக்களுக்காக எனது தந்தை உழைத்தார். எனது தந்தையின் இறப்பு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். எனது தந்தை வழியில் நானும் செயல்படுவேன்“ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் மோகன் குமாரராஜா, சுந்தரராஜ பெருமாள், மாநில வக்கீல் பிரிவு துணை தலைவர் பால்ராஜ், சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.பி.துரை, மேற்கு மாவட்ட பொருளாளர் முரளிராஜா, ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் வக்கீல் காமராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, காங்கிரஸ் நிர்வாகி கே.பி.கே.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன் நன்றி கூறினார்.

முன்னதாக பாளையங்கோட்டையில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து நடந்த கையெழுத்து இயக்கத்தை சஞ்சய்தத் தொடங்கி வைத்தார்.