அரசு நிலத்தை விடுவித்ததாக குற்றச்சாட்டு சித்தராமையாவுக்கு எதிரான வழக்கு ரத்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு
அரசு நிலத்தை விடுவித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சித்தராமையாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா சட்டவிரோதமாக மைசூரு மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் அரசு நிலத்தை விடுவித்ததாக கூறி குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இதுதொடர்பாக அவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு லட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. பின்னர் அந்த வழக்கில், சித்தராமையா குற்றமற்றவர் என்று கூறி மைசூரு கோர்ட்டில் போலீசார் ‘பி‘ அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர், மைசூரு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பின்னர் அந்த மனு மீதான விசாரணை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
வழக்கு ரத்து
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி சித்தராமையாவுக்கு சிறப்பு கோர்ட்டு சம்மன் அனுப்பி வைத்திருந்தது. தன் மீது சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கையும், தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சம்மனையும் ரத்து செய்ய கோரி சித்தராமையா தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா முன்னிலையில் நடைபெற்றது.
இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தீர்ப்பு கூறியுள்ளார். அதாவது சித்தராமையாவுக்கு எதிராக பிறப்பித்த சம்மனையும், அவருக்கு எதிரான வழக்கையும் ரத்து செய்து நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார். இந்த வழக்கில் லட்சுமிபுரம் போலீசார் சித்தராமையா குற்றமற்றவர் என்று ஏற்கனவே கோர்ட்டில் பி அறிக்கை தாக்கல் செய்திருப்பதால், வழக்கு ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story