கொரோனா பரவலால் எளிமையாக நடக்கிறது மைசூரு தசரா ஊர்வலம் எடியூரப்பா நாளை தொடங்கி வைக்கிறார்


கொரோனா பரவலால் எளிமையாக நடக்கிறது மைசூரு தசரா ஊர்வலம் எடியூரப்பா நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 25 Oct 2020 12:53 AM GMT (Updated: 25 Oct 2020 12:53 AM GMT)

கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசராவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் நாளை (திங்கட்கிழமை) எளிமையாக அரண்மனை வளாகத்தில் நடக்கிறது. இதனை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கிவைக்கிறார். இதில் 300 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மைசூரு, 

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்களாக தசரா விழா கோலாகலமாகவும், பாரம்பரியமாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

மைசூரு தசரா விழா

இந்த தசரா விழாவுக்கு வரலாற்று சிறப்பு உண்டு. அதாவது மைசூரு சமஸ்தானத்தில் 1,610-ம் ஆண்டு விஜய நகர மன்னர்களால் தசரா விழா கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீரங்கப்பட்டணாவை ஆண்ட ராஜஉடையார் மன்னரால் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில் கர்நாடகத்தில் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டது. இதில் மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மல்யுத்தம், வீரவிளையாட்டுகளும் இடம்பெற்றது.

இத்தகைய சிறப்புகளும், உலக பிரசித்தி பெற்ற தசரா விழா மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மைசூரு சாம்ராஜ்ஜியத்தில் யது வம்ச மன்னர்களால் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. கடந்த 1972-ம் ஆண்டு முதல் இந்த விழா கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது மைசூரு மன்னர்கள் அரண்மனையில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துவார்கள். அப்போது அவர்கள் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து வைப்பார்கள். இது தசரா விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

கொரோனாவால் எளிமை

மைசூரு மாகாணத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் எதிரிகளை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் இந்த தசரா விழா கொண்டாடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதுபோல் மைசூரு காவல் தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன் மகிஷா சூரனை வீழ்த்தியதை நினைவுகூறும் வகையிலும் இந்த விழா நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மைசூரு தசரா விழா கடந்த 17-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கியது. இது 410-வது தசரா விழாவாகும். கொரோனா போராளியான டாக்டர் மஞ்சுநாத், சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மலர் தூவி தசரா விழாவை தொடங்கிவைத்தார். கொரோனா பரவல் காரணமாக நடப்பு தசரா விழா மிகவும் எளிமையாக நடத்தப்பட்டு வருகிறது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதாவது பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், சிறுவர் தசரா, விவசாய தசரா, இளைஞர் தசரா, பெண்கள் தசரா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், மலர்க்கண்காட்சி, பொருட்காட்சி, ஹெலி ரைடு உள்பட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சம்பிரதாயமாக அரண்மனை வளாகத்தில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இசை நிகழ்ச்சி, பாட்டு கச்சேரி, நாடகம் உள்பட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது. இதில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் தசரா கலை நிகழ்ச்சிகளை பார்க்கவும், மின்னொளியில் ஜொலிக்கும் மைசூரு அரண்மனையை பார்க்கவும் மக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

அரண்மனையில் ஆயுதபூஜை

தசரா விழா தொடங்கியது முதல் மைசூரு அரண்மனையில் இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்தி வருகிறார். தர்பாரில் பொதுமக்கள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் பொதுமக்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது. அதுபோல் ஊடகத்தினர் பங்கேற்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மைசூரு அரண்மனை வளாகத்தில் ஆயுதபூஜை விழா நடக்கிறது. இதில் மைசூரு மகாராணி பிரமோதா தேவி, இளவரசர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி ஆகியோர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்த உள்ளனர். மேலும் மன்னர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள், வாகனங்கள், ரதங்கள் ஆகியவற்றுக்கு ஆயுதபூஜை செய்யப்படுகிறது. அத்துடன் தசரா யானைகள், ஒட்டகங்கள், மாடுகள், குதிரைகள் ஆகியவற்றுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அதன் பின்னர் இளவரசர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துகிறார். அந்த சமயத்தில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

நாளை ஜம்புசவாரி ஊர்வலம்

விழாவின் 10-வது நாளான நாளை (திங்கட்கிழமை) ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கிறது. தசரா விழாவின் சிகரநிகழ்ச்சியான இந்த ஊர்வலம் எப்போதும் மைசூரு அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பன்னிமண்டபம் வரை நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜம்பு சவாரி ஊர்வலம் இந்த ஆண்டு மைசூரு அரண்மனை வளாகத்தில் எளிமையாக நடக்கிறது. இதில் ஆண்டுதோறும் 15 யானைகள், 40-க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள், 50-க்கும் மேற்பட்ட கலைக்கழுவினர், குதிரைப்படை உள்ளிட்டவை பங்கேற்கும். இந்த ஊர்வலம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதில் 5 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5 யானைகளும், 2 அலங்கார ஊர்திகளும், 5-க்கும் குறைவான கலைக்குழுவினரும் மட்டுமே இந்தாண்டு கலந்துகொள்கிறார்கள். மேலும் 300 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தசரா விழாவையொட்டி நடைபெறும் ஜம்புசவாரி ஊர்வலத்தில் கலந்துகொள்ள அபிமன்யு, விக்ரம், கோபி, விஜயா, காவேரி ஆகிய 5 யானைகள் வந்துள்ளன. இதில் அபிமன்யு முதல் முறையாக சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்க உள்ளது. இதற்கு முன்பு அர்ஜூனா யானை தான் பல ஆண்டுகளாக தங்க அம்பாரியை சுமந்து வந்தது. அர்ஜூனா யானைக்கு 61 வயது ஆவதால், தற்போது அதற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எடியூரப்பா

தொடங்கிவைக்கிறார்

ஜம்புசவாரி ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக முஸ்டி காளகா என்னும் மல்யுத்த போட்டி அரண்மனை வளாகத்தில் நாளை காலை 7 மணிக்கு நடக்கிறது. இந்த போட்டியில் மொட்டை அடித்துக்கொண்ட இரு வீரர்கள் மோதுவார்கள். இதில் யாராவது ஒரு வீரரின் தலையில் ரத்தம் வந்தவுடன் மல்யுத்த போட்டி நிறுத்தப்படும். அதன் பின்னர் விஜயதசமி விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிடும். பகல் 12 மணிக்கு அரண்மனையில் உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள உயரமான நந்தி தூணுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பு பூஜை நடத்துகிறார்.

அதன் பின்னர் ஜம்புசவாரி ஊர்வல ஏற்பாடுகள் தொடங்குகிறது. பகல் 12.45 மணி அளவில் காவல் தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை சுமந்தபடி அபிமன்யு அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள மேடை அருகில் வந்து நிற்கும், அப்போது மேடை மீது நின்றபடி முதல்-மந்திரி எடியூரப்பா மலர் தூவி ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மகாராணி பிரமோதா தேவி, இளவரசர் யதுவீர், மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர், கலெக்டர் ரோகிணி சிந்தூரி, துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத்நாராயண் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

பன்னிமரத்துக்கு பூஜை

இந்த ஊர்வலத்தில் அபிமன்யு, தங்க அம்பாரியை சுமந்தபடி செல்ல மற்ற யானைகள் அதனை பின்தொடர்ந்து செல்லும். அதன் பின்னர் கலைக்குழுவினரும், போலீஸ் பேண்டு வாத்திய குழுவினரும், 2 அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பு நடத்த உள்ளன. இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, கொரோனா விழிப்புணர்வு அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. இந்த ஊர்வலத்தை கவர்னர் வஜூபாய்வாலா பார்வையிடுகிறார். அதன் பின்னர் அரண்மனையில் உள்ள பன்னிமரத்திற்கு இளவரசர் யதுவீர் கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துகிறார். மன்னர்கள் போருக்கு செல்லும்போது பன்னிமரத்தில் தான் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கிவைத்திருப்பதார்கள் எனவும், அதை நினைவுகூறும் வகையில் பன்னிமரத்திற்கு பூஜை நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. பன்னிமர பூஜையை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான மைசூரு தசரா விழா நிறைவு பெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாக தசரா விழா எளிமையாக நடந்தாலும் மைசூரு நகரம் திருவிழா கோலம் பூண்டு களைகட்டி வருகிறது. ஏற்கனவே கர்நாடகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பதாகவும், தசரா விழாவை சீர்குலைக்க முயற்சிக்கலாம் என்றும் மத்திய உள்துறை எச்சரித்துள்ளது. இதனால் தசரா விழாவையொட்டி அரண்மனை, மைசூரு நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Next Story