கிருமாம்பாக்கம் பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கி போலீசார் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்


கிருமாம்பாக்கம் பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கி போலீசார் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 25 Oct 2020 7:15 AM IST (Updated: 25 Oct 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கம் பகுதியில் போலீசார் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

பாகூர், 

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. 500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக புதுவையில் கொரோனா பரவல் விகிதம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதற்கிடையில் அரசு கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆயுத பூஜை, நாளை (திங்கட்கிழமை) விஜயதசமி, வருகிற 14-ந்தேதி தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தொடர்ந்து வருவதாலும், பனி காலம் தொடங்க உள்ளதாலும் வரும் காலங்களில் பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

துண்டுபிரசுரம்

இந்த நிலையில் கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வந்திரி தலைமையில் போலீசார் தங்களது எல்லைக்குட்பட்ட உச்சிமேடு கிராம மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதில் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வெளி இடங்களுக்கு சென்று வந்தால், வீட்டிற்குள் செல்வதற்கு முன் கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும்.

பண்டிகை காலம் என்பதால், கூட்டம் நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையை சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பல கிராமங்களிலும் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Next Story