புதிய பஸ் நிலைய தற்காலிக காய்கறி கடைகள் பெரிய மார்க்கெட்டுக்கு மீண்டும் மாற்றம் இன்று முதல் செயல்பட ஏற்பாடு


புதிய பஸ் நிலைய தற்காலிக காய்கறி கடைகள் பெரிய மார்க்கெட்டுக்கு மீண்டும் மாற்றம் இன்று முதல் செயல்பட ஏற்பாடு
x
தினத்தந்தி 25 Oct 2020 7:23 AM IST (Updated: 25 Oct 2020 7:23 AM IST)
t-max-icont-min-icon

புதுவை புதிய பஸ்நிலையத்தில் செயல்பட்டு வந்த தற்காலிக காய்கறி கடைகள் இன்று முதல் மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு மாற்றப்படுகின்றன.

புதுச்சேரி, 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் புதிய பஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன. கடந்த ஆகஸ்டு மாதத்தில் பஸ்களை இயக்க முடிவு செய்த நிலையில் காய்கறி மார்க்கெட் நேரு வீதிக்கு மாறியது. அதன்பிறகும் பிரச்சினை தொடர்ந்ததால் மீண்டும் பஸ் நிலையத்துக்கே கடைகள் திரும்பின.

இந்தநிலையில் தற்போது அரசு சாலை போக்குவரத்து பஸ்கள் மட்டுமல்லாமல் தனியார் பஸ்களும் ஓடத்தொடங்கி உள்ளன. பஸ் நிலையத்தின் வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் அந்த வழியாக சென்று வருவதில் சிக்கல் எழுந்தது.

இதையடுத்து பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி கடைகளை மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதுகுறித்து வியாபாரிகள் சங்க தலைவருடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதை அடுத்து கடைகளை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் சம்மதித்தனர். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பெரிய மார்க்கெட்டுக்கு கடைகள் மாற்றப்பட்டு ஏற்கனவே இருந்தது போல் செயல்பட உள்ளன.

கூரைகள் பிரிப்பு

அதன்பேரில் தற்காலிக மார்க்கெட்டில் போடப்பட்டு இருந்த மேற்கூரைகளை பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அங்குள்ள சாமியானா பந்தல்கள், தடுப்புகள், காய்கறி கடைகளை பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 60 பெரிய கடைகள், 150 அடிக்காசு கடைகள் உள்பட 200க்கும் மேற்பட்ட கடைகள் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டன.

இதன்பின் நகராட்சியால் பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. வரும் 27-ந்தேதி முதல் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதையடுத்து 7 மாதங்களுக்குப் பின் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

கடைகள் இடமாற்றம் செய்வது குறித்து கேட்டபோது வியாபாரிகள் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதில் பெரிய மார்க்கெட் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. பண்டிகை காலம் நெருங்கி உள்ளதால் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கும் பஸ் விட அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. எனவே பஸ் நிலைய தற்காலிக கடைகளை காலி செய்து கொண்டு மீண்டும் பெரிய மார்க்கெட்டுக்கு திரும்புகிறோம்’ என்று தெரிவித்தனர்.

Next Story