ஆயுதபூஜையையொட்டி பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர்


ஆயுதபூஜையையொட்டி பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 25 Oct 2020 9:20 AM IST (Updated: 25 Oct 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்படுவதையொட்டி புதுக்கோட்டையில் பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுக்கோட்டை, 

நவராத்திரி விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆயுதபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகளில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். பூஜையில் பொரி, அவுல், பொரிகடலை, சுண்டல், சர்க்கரை பொங்கல் தேங்காய், பழம், ஆப்பிள், மாதுளம், கொய்யா உள்ளிட்ட பழங்களை வைத்து படையலிட்டு வழிபாடு நடத்துவது உண்டு. இதேபோல ஆட்டோ, கார் நிறுத்தங்களிலும், தொழில் புரியும் அனைத்து இடங்களிலும் செய்யும் தொழிலே தெய்வமாக கருதி பூஜை நடத்துவார்கள். ஆயுதபூஜையையொட்டி புதுக்கோட்டையில் பூஜை பொருட்கள் வாங்க கடைவீதியில் நேற்று பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பூஜை பொருட்கள்

புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் பூஜைக்கான பொரி, பொரிகடலை, பழ வகைகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி சென்றனர். மேலும் வாழைக்குலை, தடியங்காய், வாழை இலை, பத்தி, சூடம், சாம்பிராணி உள்ளிட்டவற்றையும் தேவைக்கேற்ப வாங்கினர். கடைகளில் பொரி லிட்டர் கணக்கிலும், பாக்கெட்டுகளில் அடைத்தும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பூஜை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பாக்கெட்டுகளில் அடைத்தும் வியாபாரிகள் விற்றனர். சாலையோரங்களில் பூஜை பொருட்கள் விற்பனையும் நடைபெற்றது. இதேபோல பூஜைக்கான பூக்களையும் பொதுமக்கள் வாங்கினர். ஆயுதபூஜையையொட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,000 முதல் ரூ.1,500 வரைக்கும் விற்றது. இதேபோல சம்பங்கி, செவ்வந்தி, செண்டி பூ உள்ளிட்ட பூக்களின் விலையும் அதிகரித்திருந்தது. நவராத்திரி விழாவில் 8-ம் நாளான நேற்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நாளை (திங்கட்கிழமை) விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அன்னவாசல்

அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் நேற்று காலை முதலே ஆயுத பூஜைக்கான பொருட்கள் வாங்கிட பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விலை வழக்கத்தை விட நேற்று அதிகரித்து இருந்தது. வெள்ளை பூசணி ஒன்று ரூ.50 முதல் 100 வரை விற்பனையானது. அதுபோல வாழைப்பழம் பூவன் சீப் ஒன்று ரூ.30 முதல் 50 வரையிலும், மாதுளை கிலோ ரூ.100, ஆப்பிள் கிலோ ரூ.150 வரையிலும், பொரி லிட்டர் 10 ரூபாய்க்கும், அவல் ஒரு லிட்டர் 40 ரூபாய்க்கும் விற்பனையானது.

Next Story